ஓ.சியில் பொருட்கள் தருகிறோமா? அதை நீங்கள் சொல்லலாமா? - திண்டுக்கல் ஐ. லியோனி
’’ஓசியில் வாங்குவதை பிழைப்பாக வைத்திருந்தவர்கள், ஓசியில் பொருட்களை கொடுப்பது திராவிட மாடல் ஆட்சியா? என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்'’
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், "பால்வளத்துறை அமைச்சர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு ராஜேந்திரபாலாஜி, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆவடி சா.மு.நாசர். இலங்கையில் வறுமையில் வாடும் நமது தொப்புள் கொடி தமிழ் உறவுகளுக்கு மட்டுமல்ல, நம்மை கொடுமைப்படுத்திய சிங்கள மக்களுக்கும் சேர்த்து உணவு, மருந்து பொருட்களை அனுப்பிய தலைவர் நம்முடைய முதல்வர்.
ஜனநாயக அடிப்படையில் பட்டினப்பிரவேசத்திற்கு அனுமதி
ஓசியில் வாங்குவதை பிழைப்பாக வைத்திருந்தவர்கள், ஓசியில் பொருட்களை கொடுப்பது திராவிட மாடல் ஆட்சியா? என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்து முதலமைச்சர் சாதனை படைத்துள்ளார். பட்டினப்பிரவேசம் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களையும் வரவைத்து, அவர்களின் கருத்தை கேட்டு அனுமதித்த தலைவராக முதல்வர் உள்ளார். ஜனநாயக அடிப்படையில் முதலமைச்சர் பட்டினப்பிரவேசத்தை அனுமதித்துள்ளார். பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து பணிந்தது என்று சொன்னால், இது பணிவல்ல; அரசியல் சாணக்கியத்தனம். பக்தி மார்க்கத்தையும் தடுக்கமாட்டோம், பகுத்தறிவு பிரசாரத்தையும் நிறுத்தமாட்டோம் என அப்போதே கலைஞர் கூறி உள்ளார். தமிழிலே அர்ச்சனை செய்ய வைத்து, அனைத்து சாதியினரையும் கோயிலுக்கு அர்ச்சகராக கொண்டுவந்து பெரியாரின் சாதனையை நிலைநாட்டியவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
வணக்கத்திற்குரிய மேயர் என்று சொல்ல வைத்த திராவிட புரட்சி
செறுப்பை தூக்கி தலையிலே வைத்து கொண்டு சென்ற சமுதாயத்தை, வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே என்று சொல்ல வைத்த திராவிட புரட்சியை செய்த தலைவர் மு.க.ஸ்டாலின். பெண்கள் எல்லாம் வெட்டி அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு முதன்முதலில் ஓட்டுரிமையை வாங்கி கொடுத்தது, நம் தாய் கட்சியான நீதிக்கட்சி, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது கலைஞர், இன்று பெண்களுக்கு அரசியலில் 50% இடஒதுக்கீடு கொடுத்து புரட்சி கவிஞர் பாரதிதாசனை போல் ஆட்சி நடத்தி வருகிறார் நம் தலைவர்.
ஸ்டாலின் கைக்காட்டும் நபரே பிரதமர்
டெல்லி செங்கோட்டைக்கு அருகே திராவிட கோட்டையான அறிவாலயத்தை நிறுவியுள்ளார் நம் தலைவர். 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் யாரை கைக்காட்டுகிறாரோ அவர்தான் நாட்டின் பிரதமர் ஆவர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு" எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ராஜீவ்காந்தி படுகொலை மனிதநேயமற்ற கொடுஞ்செயல்; உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் - வீரமணி