TN Governor Ravi Annamalai Delhi Visit: விறுவிறுப்பாகும் தமிழ்நாடு அரசியல் களம்.. டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, அண்ணாமலை..!
தமிழ்நாடு அரசியல் களம் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் ஆளுநர் ரவி மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்வது அரசியலில் இன்னும் பரபரப்பை கூட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் ஆளுநர் ரவி மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச், 23)டெல்லி செல்வது அரசியலில் இன்னும் பரபரப்பை கூட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முற்றிலும் வேறு விதமாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் செயல்பாடுகள் தமிழகத்தில் அதிகமாகி போக, மாநில கட்சிகளாக இருக்கும் திமுக, அதிமுகவால் ஒரு கட்டத்திற்கு மேல் மத்திய பாஜக அரசை நேரடியாக பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற நிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது.
அதிலும், மத்தியில் ஆளும் பாஜக, தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தங்களது சித்தாந்தங்களுடன் ஒத்துப்போகிறவர்களை ஆளுநர்களாக நியமிப்பது, அல்லது நேரடியாக பாஜக பொறுப்பாளர்களை ஆளுநர் ஆக்குவது என அரசியல் சதுரங்கத்தை ஆடி வருகிறது.. இதன் மூலம் ஆளும் கட்சிக்கு நெருக்கடியை எற்படுத்த முடியும் என பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. இப்படியான போக்கினை வாடிக்கையாக கொண்டுள்ள பாஜவினால் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைப் போல் மிக வேகமாக தனது யுக்திகளை நிறைவேற்ற முடியவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. அதிலும் குறிப்பாக கட்சிகளால் ஒரு கட்டத்துக்கு மேல் பாஜவை பகைக்க முடியவில்லை எனும் சூழல் இருக்கும் போதும் கூட தமிழ்நாட்டில் உள்ள திராவிட இயக்க அரசியல் பாஜகவிற்கு கூடுதல் சவாலை தருகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிமுக, பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவருக்கும் அதிமுகவிற்கும் இடையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு மோதல் போக்கு அதிகரித்தது. இதன் விளைவாக அதிமுகவுடனான கூட்டணியை பாஜக முடித்துக்கொண்டு வரும் காலங்களில் தனித்து அரசியல் செய்ய வேண்டும் என அண்ணாமலை மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில் அண்ணாமலை அவசர அவசரமாக டெல்லி விரைகிறார். அதிமுக மூலமாக தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெறவேண்டும் என்ற பாஜகவின் திட்டத்துக்கு அண்ணாமலையின் யோசனை முட்டுக்கட்டை போடும் வகையில் உள்ளதாக அந்த கட்சியின் நிர்வாகிகளே கருதுகின்றன என ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், அவர் டெல்லி செல்வது முக்கியத்துவம் வாந்ததாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்குமான உரசல் இந்த ஆண்டு உச்சகட்டத்தினை எட்டியுள்ளது. ஆளுநரின் மேடைப் பேச்சுகள் சர்ச்சைகளை கிளப்பிய வண்ணம் இருக்க, அதற்கு ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு சட்டபேரவையில் அளுநர் உரை முடிந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசத் தொடங்கினார். இதனால் ஆளுநர் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். மேலும், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில வார்த்தைகளை தவிர்த்தும் சில வார்த்தைகளை சேர்த்தும் வாசித்தார். கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் சில கேள்விகளையும் கேட்டு இருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு விளங்களையும் அளித்து இருந்தது, இந்நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாடு சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவைவை தாக்கல் செய்யும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியும் டெல்லி விரைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.