காங்கிரஸ் மோதல்: ‛அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி’ - கார்த்தி சிதம்பரத்துக்கு கோபண்ணா பதிலடி!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கட்சியின் முக்கியத் தலைவர்களிடையே மோதல் தீவிரமாகியுள்ளது. காரணம் என்ன?
ட்விட்டர், ஃபேஸ்புக் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா அண்மையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை ஃபேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
என்ன நடந்தது?
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் விநாயகர் ஊர்வல கருத்து தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சசிகாந்த் செந்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்தில் அந்தக் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் சசிகாந்த் செந்தில் யார் என்னும் வகையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
வீடியோவை மடைமாற்றம் செய்ய "விநாயகரை" கையில் எடுத்துள்ளது பாஜக.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 2, 2021
- ஒருங்கிணைப்பாளர் திரு சசிகாந்த் செந்தில் pic.twitter.com/X0NHWbNNyA
கார்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே அவரது ட்வீட்டை கடுமையாகக் கண்டித்து பேஸ்புக்கில் எழுதியுள்ளார் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா
அதில்,
’கர்நாடக மாநிலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரத்துடன் இந்திய ஆட்சிப் பணியில் இருந்தவர் திரு. சசிகாந்த் செந்தில். அவர் பணியிலிருந்த காலத்தில் நேர்மையாக, திறமையாக, ஆற்றல்மிக்கவராக, மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக செயல்பட்டு பெருமை பெற்றவர். அத்தகைய மிக உயர்ந்த பொறுப்பிலிருந்த அவர், காங்கிரஸ் கட்சியின் கொள்கை மீது பற்று கொண்டு, குறிப்பாக காந்தி, நேரு கருத்தியலில் ஈர்க்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஆர்.எஸ்.எஸ். வழிவந்த வகுப்புவாத கருத்துகளைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற லட்சிய நோக்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தவர். தலைவர் ராகுல்காந்தியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டுமென்று கருதியவர்.
ஓர் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரராக, கொள்கைவாதியாக, காங்கிரசில் இணைந்த அவரை, தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கிற லட்சோப லட்சம் தொண்டர்களும் மனப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். தமிழக மக்களும் இப்படிப்பட்ட அளப்பரிய தியாகத்தைச் செய்து பொது வாழ்க்கைக்கு வந்திருக்கிற திரு. சசிகாந்த் செந்தில் அவர்களை மனதாரப் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தது முதற்கொண்டு எளிமையான தொண்டராக, ஆரவாரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் மிக அமைதியாக விளம்பரமில்லாமல் கட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது அனுபவம், திறமையின் காரணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரின் அன்பையும், ஆதரவையும் பெறுகிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தலைவர் ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப் பயணங்களில் முன்கூட்டியே அந்த பகுதிகளுக்குச் சென்று நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய அடிப்படைப் பணிகளைத் திட்டமிட்டு அற்புதமாக, மிகக் கச்சிதமாகச் செய்தவர் சசிகாந்த் செந்தில்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்ட அவர், வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சியினரின் தவறுகளை ஆதாரப்பூர்வமான வாதங்களை முன்வைத்து முறியடிப்பதில் முனைப்புக் காட்டுகிறவர். உள்ளத்தில் உண்மை ஒளி இருக்கிற காரணத்தினாலே அவரது வாதங்கள் மிக மிகக் கூர்மையாக அமைகின்றன.
அவருக்குத் தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது. தொலைக்காட்சி விவாதங்களில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைப்பதன் மூலமாக காங்கிரசின் கொள்கை முரசாகத் திகழ்ந்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த பொக்கிஷமாக அவர் விளங்குகிறார். இத்தகைய வெற்றிக்கு காரணம் அவரிடம் எதிர்மறை சிந்தனை - Negative Thinking இல்லாததே ஆகும்.
சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஆகியோர் கலந்து பேசி தமிழக காங்கிரசில் துணை அமைப்புகளாக இருக்கிற சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்துவதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் நியமிக்கப்பட்ட கடிதம் தான் மேலே இடம் பெற்றிருக்கிறது. இந்த பொறுப்பு வழங்கியதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் என்று அவரை அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது ? என்ன குற்றம் இருக்கிறது ? காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளில் இல்லாத பொறுப்பாளர், பார்வையாளர் போன்ற பதவிகள் வழங்குவதைப் போல தான் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பணிகளை செய்வதற்காக இத்தகைய பொறுப்புகள் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இதைவிட மிகப்பெரிய பொறுப்புகளை திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி வழங்குகிற காலம் ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியாக இருக்கிற அவரது உண்மையான கொள்கைப் பற்றின் காரணமாகவும், அடக்கமான செயல்பாட்டினாலும் தமிழக காங்கிரஸ் கட்சியினரின் நன்மதிப்பையும், அன்பையும், ஆதரவையும் அவர் மிகப்பெரிய அளவில் பெற்று வருகிறார் என்பதை அறியும் போது, மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஓர் உண்மையான ஊழியருக்கு உயர்வு கிடைக்கும் போது மகிழ்ச்சி அடைபவர்கள் தான் உண்மையான காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியும்.
ஒரு சிறிய உயர்வு ஏற்படுகிற போது அதைக் கூட தாங்கிக் கொள்ளாமல், சகித்துக் கொள்ளாமல் கருத்துகளைக் கூறுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும். காங்கிரஸ் கட்சியில் இத்தகைய போக்கு இருப்பது நல்லதல்ல. இது ஆரோக்கியமான அரசியலுக்கு உதவாது. இத்தகைய உட்பகை அரசியலைத் தவிர்க்க வேண்டுமென்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம். அதுவே நமது உயர்வுக்கு வழிவகுக்கும். அந்தவகையில், தகுதியும் ஆற்றலுமிக்க திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் தற்போது பெற்றுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவியை விட, எதிர்காலத்தில் தமிழக காங்கிரசின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக வருவார் என்று எனது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் உறுதியாகக் கூறுகிறேன். திரு. சசிகாந்த் செந்தில் அவர்களின் பணி தொய்வின்றி தொடர அவரை மனதார வாழ்த்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.