![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Governors From TN: ஆளுநர்களை அள்ளித் தந்த தமிழ்நாடு... ராஜ்பவன் அரியணையை அலங்கரித்த லிஸ்ட் இதோ!
இதுவரை தமிழ்நாட்டில் இருந்து ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பற்றிய விபரம் இதோ!
![Governors From TN: ஆளுநர்களை அள்ளித் தந்த தமிழ்நாடு... ராஜ்பவன் அரியணையை அலங்கரித்த லிஸ்ட் இதோ! Tamilisai Soundararajan, Sadhasivam, L ganesan list of people appointed as governors from TamilNadu Governors From TN: ஆளுநர்களை அள்ளித் தந்த தமிழ்நாடு... ராஜ்பவன் அரியணையை அலங்கரித்த லிஸ்ட் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/22/8bb855ad3c9be3ce1e73615e0d05eb5c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் இன்று நியமனம் செய்யப்பட்டார். இங்கு ஆளுநர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலிருந்த தமிழிசைக்கு அடுத்தபடியாக இரண்டாவது நபராக இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்படுகிறார். இந்த வரிசையில், இதுவரை தமிழ்நாட்டில் இருந்து ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பற்றிய குறிப்பு இதோ!
சி. சுப்ரமணியம்:
இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான சி. சுப்ரமணியம், சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றவர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்ட இவர், மத்திய நிதித்துறை அமைச்சராகவும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர், மகராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தார். 1998-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றவர்.
வி. சண்முகநாதன்
தஞ்சாவூரைச் சேர்ந்த வி. சண்முகநாதன் 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மேகாலையா மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்தார். அதே நேரத்தில், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்தார். ஆனால், சர்ச்சையில் சிக்கிய அவர் மேகாலையா ஆளுநர் மாளிகை ஊழியர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்து விலகினார்.
தமிழிசை செளந்தரராஜன்
கடந்த 2019-ம் ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாடு முன்னாள் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர், மகப்பேறு மருத்துவரும் கூட. அதனை தொடர்ந்து, 2021 பிப்ரவரி மாதம் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழிசை. புதுச்சேரி வரலாற்றில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் துணைநிலை ஆளுநரானார் தமிழிசை.
பி. சதாசிவம்
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த சதாசிவம், சென்னை சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்ற அவர், 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, 2014-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தார். இந்திய வரலாற்றில், உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மாநிலத்தின் ஆளநராக தேர்வு செய்யப்பட்டது அதுவே முதல் முறை.
இல. கனேசன்
76 வயதான கணேசன் 1945ல் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தவர். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இரண்டு முறையும் தோல்வியடைந்தாலும் பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று ராஜ்யசபா உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு 2015ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வந்தது. 2020ம் ஆண்டு கூட அவர் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்கிற செய்தி வெளியானது. பின்னர் அந்தச் செய்தி மறுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது மணிப்பூரி ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கணேசன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)