‛நல்லகண்ணு காலில் விழுந்து வருத்தம் தெரிவித்த பெரும் பணக்காரர்கள்’ -தமிழருவி மணியன் சொன்ன பிளாஷ்பேக்!
‛‛இரு கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன். அதானி, அம்பானி வீட்டு திருமணம் போல அது நடந்தது. எல்லா கம்யூனிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களாக இருப்பதில்லை’’
கம்யூனிஸ்ட் தலைவர்களில் வாழும் மாமனிதராக போற்றப்படுபவர், தோழர் நல்லக்கண்ணு. அவரது எளிமை தான் அவரது அடையாளம். அதற்கு நிறைய உதாரணம் உண்டு. அப்படி தன் வாழ்நாளில் நல்லகண்ணுவிடம் கண்ட நற்குணங்களை நெகிழ்ச்சியோடு மேடை பேச்சியில் பேசியுள்ளார், பேச்சாளர் தமிழருவி மணியன். இதோ அவரது பேச்சு....
‛‛கம்யூனிஸ்ட்களுக்கு இலக்கணம், நேர்மையாக, எளிமையாக இருப்பது தான். காந்தியும், காமராஜரும் சேர்ந்த கலவை நல்லகண்ணு. காந்தியசகாப்தத்தின் கடைசி கருணை நல்லக்கண்ணு. யோகியாக வாழ்பவர் அவர். என் வாழ்வில் நான் இரு அதிசய மனிதர்களை அறிந்தேன். அதில் இருவரில் ஒருவர் நல்லக்கண்ணு; மற்றொருவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
இரு கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன். அதானி, அம்பானி வீட்டு திருமணம் போல அது நடந்தது. எல்லா கம்யூனிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களாக இருப்பதில்லை. நேர்மையாக இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் நல்லக்கண்ணு போட்டியிட்டார்; நல்லவர்கள் பின்னால் நாம் எப்போது நின்றோம்? அவர் தோற்கடிக்கப்பட்டார்.
அதன் பின் அங்குள்ள அரிமா சங்கத்தில் போய் பேசினேன். மிகப்பெரிய மனிதர்களை பாராட்டுபவர்கள் அவர். நல்லகண்ணுவுக்கு இதுவரை நீங்கள் பாராட்டவில்லை, அவரை நீங்கள் தோற்கடித்துவிட்டீர்கள் என்று என் அதிருப்தியை அவர்களிடம் தெரிவித்தனர். வந்தால், வரவேற்கிறோம் என்றனர். நான் அழைத்து வருகிறேன் என்றேன். நல்லகண்ணுவிடம் பேசினேன். அரிமா சங்கம் என்றதுமே வர மறுத்தார். ‛ஏழைகளிடம் கம்யூனிசம் பேசினால் எப்படி... எல்லாம் படைத்தவனிடம் கம்யூனிசம் பேசுங்கள்,’ என்றேன் . அதன் பின் ஒப்புக்கொண்டார்.
எனக்கும், அவருக்கும் இரண்டாம் ஏசி இருக்கை தயார் செய்திருந்தனர். நான்காத்துக் கொண்டிருந்தேன். ஒரு பையோடு வந்தார். ஏசி அறை அருகே அவரை அழைத்துச் சென்றேன். அவர் ஏசி அறையை பார்த்ததும், அவர் அங்கு ஏற மறுத்துவிட்டார். நான் ஏசி அறையில் படுத்தது இல்லை என மறுத்தார். ‛அய்யா வேற வழியில்லை... இனி மாற்று ஏற்பாடு செய்ய முடியாது; இருக்கை இருக்காது..’ என அவரை கட்டாயப்படுத்தி ஏசி கோச்சில் ஏற்றினேன்.
அந்த பயணத்தை அவர் விரும்பாமல், நரக வேதனை அடைந்ததை கண்ணுக்கு நேராக பார்த்தேன். அவருக்கு துளி கூட அங்கு இருக்க விருப்பமில்லாமல் இருந்தார். ஊர் வந்ததும், அன்னபூர்ணாவில் நமக்கு அறை ஒதுக்கியிருக்கிறார்கள் என்றேன். ‛வந்தது வரை ஓகே... எனக்கு கம்யூ., அலுவலகம் இருக்கிறது. அங்கு தங்கிக் கொள்கிறேன். நீங்கள் கூறும் இடத்திற்கு வந்துவிடுகிறேன்,’ என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு விட்டார். சொன்ன இடத்திற்கு, சொன்ன நேரத்திற்கு வந்தார்.
பெருங்கோடீஸ்வரர்கள் முன்னிலையில் அவர் பேசினார். பேசி முடிந்ததும், பெரும்பணக்காரர்கள் ஒவ்வொருவரும் வந்து அவர் காலில் விழுந்து வணங்கினர். ‛அய்யோ... உங்களுக்கு ஓட்டு போடாமல் போய்விட்டோமே....’ என்று மனம் நொந்து கொண்டனர். ,’’ என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்