சிதறிக் கிடக்கும் வாக்குகள்.. வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் எதிர்க்கட்சிகள் - குஷி மோடில் திமுக!
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியே இருப்பது திமுக-விற்கு சாதகமான சூழலை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆட்சியைத் தக்க வைக்க ஆளுங்கட்சியான திமுக-வும், ஆட்சியை மீண்டும் தக்க வைக்க எதிர்க்கட்சியான அதிமுக-வும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.
அணி அணியாக பிரிந்து கிடக்கும் அதிமுக:
காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. ஆனால், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாக மட்டுமே உள்ளனர். பாமக, அமமுக-வுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் நாம் தமிழர் மற்றொரு திசையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என இந்த முறை பல முனை போட்டி உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கடந்த அரை நூற்றாண்டுகளாக திமுக - அதிமுக என்ற மோதல் போக்கே உருவாகி வருகிறது. கருணாநிதி - எம்ஜிஆர், கருணாநிதி - ஜெயலலிதா என்ற ஆளுமைகளுக்கு பிறகு தற்போது மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி என்று உள்ளது. திமுக-வைப் பொறுத்தமட்டில் மு.க.ஸ்டாலினின் தலைமையை அந்த கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆட்சியிலும் உள்ளனர்.
எடப்பாடிக்கு சவால்:
ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வில் தலைமையை பல கட்டங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினாலும் தற்போது மீண்டும் அவருக்கு உட்கட்சியே நெருக்கடி அளித்து வருகிறது. ஏற்கனவே சசிகலா அணி, தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என பிரிந்துள்ள நிலையில் தற்போது புதியதாக செங்கோட்டையன் அணி உருவாகி வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக பல அணிகளாக சிதறி அதிருப்தி தொண்டர்களுடன் தேர்தலைச் சந்திப்பது அவர்களுக்கு மிகப்பெரிய சரிவை அளிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படத் தொடங்கிய பிறகு இதுவரை எந்தவொரு மிகப்பெரிய வெற்றியையும் அதிமுக திமுக-வை வீழ்த்தி பெரியவில்லை. இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
ஓட்டுகளை பிரிக்கப்போகும் விஜய்:
மற்றொரு பக்கம் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் பல தொகுதிகளில் வாக்குகளை சரமாரியாக பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள், நாம் தமிழர் வாக்குகளை அதிகளவு விஜய் கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால், திமுக தலைமையில் இருப்பது போல ஒரு அணியாக அவர்கள் இல்லாதது திமுக-விற்கு சாதகமாக உள்ளது. மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பல்வேறு விமர்சனங்களும், போராட்டங்களும் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாகவும், தனித்தனியாகவும் இருப்பதால் வாக்குகள் சிதறவே வாய்ப்புள் அதிகளவு உள்ளது.
சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சி வாக்குகள்:
எடப்பாடி ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், சசிகலா ஆதரவாளர்கள், தினகரன் ஆதரவாளர்கள் என அதிமுக-விலும், பாமக-விலே அன்புமணி ஆதரவாளர்கள், ராமதாஸ் ஆதரவாளர்கள் எனவும், மற்றொரு புறம் விஜய் வாக்குகள், சீமான் வாக்குள் எனவும் திமுக-வை எதிர்ப்பவர்களின் வாக்குகள் அனைத்தும் தனித்தனியாகவே இருப்பதால் எதிர்க்கட்சியின் வாக்குகள் சிதறினாலே திமுக-வின் வெற்றி வாய்ப்பு சட்டமன்ற தேர்தலில் மிகவும் எளிதானதாக மாறிவிடும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.





















