Andimuthu Raja : நினைவேந்தல் கூட்டத்தில் அரசியல் செய்த ஆ.ராசா’ அப்செட்டான 2 அமைச்சர்கள்..!
தனது மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்து துறையை திமுக தலைமை கொடுத்ததை விரும்பாத ஆ.ராசா, அதற்கு காரணம் திமுக முதன்மை செயலாளரும் மூத்த அமைச்சருமான கே.என்.நேருதான் என நினைக்கிறார்
கடந்த 26ஆம் தேதி பெரம்பலூர் ஜே.கே.அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் பெரம்பலூர் கிட்டுவின் தாயார் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆ.ராசா செய்த அரசியலால், அதில் பங்கேற்ற அமைச்சர்கள் கே.என்.நேருவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அப்செட் ஆகியுள்ளனர்.
27ஆம் தேதி படத்திறப்பு விழா திட்டமிடப்பட்டு அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரமும் கொடுத்த பின்னர், ஆ.ராசா அந்த தேதியில் வரமுடியாது என்று சொன்னதால், நிகழ்வு 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் திமுக அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஆ.ராசா, நினைவேந்தல் நிகழ்வுக்கு மூத்த அமைச்சர் கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வருவதை அறிந்து கோபமாக எழுந்து தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டுள்ளார்.
தனது சொந்த மாவட்டமான பெரம்பலூரில் நடைபெறும் ஒரு நிகழ்வில் தன்னை முன்னிலைப்படுத்தாமல், திருச்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்களையும், அதோடு அதே மாவட்டத்தை சேர்ந்த இன்னொரு அமைச்சரான சிவசங்கரையும் அழைத்ததை விரும்பாத ஆ.ராசா, தனக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பாக பேசி கோபப்பட்டுள்ளார்.அதோடு, திமுகவின் முதன்மை செயலாளராகவும் மூத்த அமைச்சராகவும் இருக்கும் கே.என்.நேரு படதிறப்பு நிகழ்வுக்கு வரும்போது அவரை சென்று அழைத்து வராமல், அவருக்கு முன்னரே நினைவேந்தலுக்கு வந்து, கிட்டுவின் தாயார் படத்திற்கு மலர்த்தூவிவிட்டு மட்டும் சென்றுள்ளார்.
கே.என்.நேரு படத்திறப்பு நிகழ்வுக்கு வந்தப்போது மாவட்ட அமைச்சரான எஸ்.எஸ்.சிவசங்கரே அவரை நினைவேந்தல் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அதோடு, இந்த நிகழ்வுக்காகவே டெல்லியில் இருந்து வந்த ஆ.ராசா, மேடையில் ஏறி நினைவேந்தல் உரை ஆற்றாமல், நேரு வருகிறார் என்ற தகவல் கிடைந்த ஒரு சில நிமிடங்களிலேயே படத்திறப்பு நிகழ்ச்சியை அவசர அவசரமாக முடித்து விட்டு, டெல்லி செல்ல வேண்டும் என்று சொல்லி வெளியேறியிருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆ.ராசா, தற்போதைய போக்குவரத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கரனின் தந்தை சிவசுப்பிரமணியனால் அரசியலில் வளர்த்துவிடப்பட்டவர். ஆனால், அவர் மறைந்த பிறகு சிவசங்கரை மாவட்டத்தில் முன்னிலைப்படுத்தவிடாமல் பல உள்ளடி வேலைகளை பார்த்து வந்திருக்கிறார். இதனால் மனம்குமுறிய சிவசங்கர், திமுக தலைமையிடமும் பஞ்சாயத்துகளை பேசி முடிப்பவரான கே.நேருவிடமும் முறையிட்டிருக்கிறார்.
இதனை மனதில் வைத்துக்கொண்டிருந்த திமுக தலைமை, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது சர்ச்சை எழுந்த நிலையில், போக்குவரத்துறையை அவரிடமிருந்து பறித்து எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொடுத்தது. ஏற்கனவே சிவசங்கரை பிடிக்காத ஆ.ராசா, பெரம்பலூர் மாவட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்று செயல்பட்ட ஆ.ராசா, திமுக தலைமையின் இந்த உத்தரவாலும் கடும் எரிச்சலடைந்திருக்கிறார். அதனால், நேரு, மகேஷ், சிவசங்கர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவர்கள் ஒருவருடன் கூட கலந்துகொள்ளாமல், அரசு கொறாடாவுடன் மட்டும் தனியாக வந்து சென்றுள்ளார்.
இதனையறிந்து நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்த திருமாவாளவன்,கடும் வருத்தமடைந்ததாகவும் ‘நம்மாளுதான்யா நம்மள மதிக்கவோ கண்டுக்கவோ மாட்டாங்குறான்’ என புலம்பியதாகவும் கூறப்படுகிறது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் கூட ஒன்றாக கலந்துக்கொள்ளமுடியாத தலைவர்களால், எப்படி கட்சியை கட்டுப்கோப்பாக வைத்துக்கொள்ளமுடியும் என புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்