BJP Leader Annamalai : தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை ஓராண்டு நிறைவு..! சாதித்ததும்..! சறுக்கியதும்...!
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பலருக்கும் அறிமுகம் ஆகாத ஒரு கட்சியாக இருந்து வந்தது . ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு தமிழ்நாட்டிலும் பா.ஜ.க.வின் வளர்ச்சி அனைவராலும் கவனிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வந்தது. குறிப்பாக, சட்டமன்றத்தில் ஒரு இடம்கூட கிடைக்காது என்றே அனைவராலும் கருதப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 4 தொகுதிகளை வெல்லும் அளவிற்கு பா.ஜ.க.வை வளர்த்துக் காட்டியதில் அண்ணாமலையின் பங்கு தவிர்க்க முடியாது.
கடந்த 2020ம் ஆண்டு தமிழக பா.ஜ.க.வில் இணைந்த அண்ணாமலை, கடந்தாண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி தமிழக பா.ஜ.க.வின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு அக்கட்சியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். இந்த நிலையில், இன்றுடன் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை குப்புசாமி. இவருடைய தாய் பரேமேஸ்வரி. கோவையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அண்ணாமலை, இந்திய மேலாண்மை பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ. படிப்பை முடித்தார். எம்.பி.ஏ. படிப்பை முடித்த அண்ணாமலை ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கர்நாடகாவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் கர்நாடகாவில் அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் அவரை அந்த மாநில மக்கள் கர்நாடக சிங்கம் என்று அழைத்தனர்.
யாரும் எதிர்பாராத விதமாக 2020ம் ஆண்டு தனது ஐ.பி.எஸ். அதிகாரி பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை சுயசார்பு விவசாயத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவு, ரஜினிகாந்த் கட்சியில் சேர்வார் என்று பல தரப்பிலும் யூகிக்கப்பட்ட நிலையில், திடீரென டெல்லியில் ஜே.பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை. அவர் பா.ஜ.க.வில் இணைந்தபோது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வலுப்படுத்த தன்னால் இயன்ற முயற்சியை செய்வேன் என்றார்.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே இருந்த பா.ஜ.க.வை பலதரப்பட்ட சமூகமும் பணியாற்றும் கட்சியாக மாற்றியதில் அண்ணாமலையின் பங்கு அளப்பரியது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று 2011ம் ஆண்டு கேட்டிருந்தால் நிச்சயம் அப்படி ஒரு கட்சி இருக்கிறதா? என்றே மக்கள் கேட்டிருப்பார்கள். ஆனால், 2021ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் அந்த கட்சி 28.3 சதவீத மக்கள் பா.ஜ.க.வின் தாக்கம் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினர்.
குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த தமிழக பா.ஜ.க., கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 20 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டது. பா.ஜ.க.வில் இணைந்தது முதலே செந்தில்பாலாஜி மீது மிக கடுமையான குற்றச்சாட்டை அண்ணாமலை சாட்டிவந்தார். அண்ணாமலைக்கும், செந்தில்பாலாஜிக்குமான வார்த்தை மோதல் அப்போது மிகவும் பரபரப்பாக இருந்தது.
இதன்காரணமாக, செந்தில்பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் களமிறங்கினார் அண்ணாமலை. அந்த தொகுதியில் அண்ணாமலை தோற்றாலும், தமிழக சட்டசபைக்குள் பா.ஜ.க. கால்தடம் பதிக்க முடியாது என்ற நிலைமையை மாற்றி 4 எம்.எல்.ஏ.க்களை உருவாக்கியதில் அண்ணாமலையின் பங்கு முக்கியமாக அமைந்தது. அப்போது, கட்சியின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்த அண்ணாமலை தமிழகம் முழுவதும் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டார்.
எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை கட்சியில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் பலரை ஓரங்கட்டினார். அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏராளமான நிர்வாகிகளை நியமித்தார். சட்டசபை தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் போக்கு வலுப்பெற்றது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது ஆக்கப்பூர்வ பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அண்ணாமலை, தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு போட்டி நாங்கள்தான் என்று அடிக்கடி பேட்டி அளித்தார். மேலும், நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று பா.ஜ.க. நிர்வாகிகள் கூறும் அளவிற்கு செயல்படவைத்தார். தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு உடனடி விமர்சனம், தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சமீபத்தில் நடந்த உண்ணாவிரதம் என்று தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை அனைவரும் கவனிக்கும் விதமாகவே வைத்திருந்தார். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான பகுதிகளிலும் கவுன்சிலர் பதவிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. மேலும், தமிழக பா.ஜ.க.வில் கடந்த ஓராண்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகனை பா.ஜ.க. பக்கம் இழுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீட் தேர்வுக்கு ஆதரவு, புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் தமிழக பா.ஜ.க.விற்கு தொடர்ச்சியாக பெருவாரியான எதிர்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதேசமயத்தில், அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த எச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சிலர் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இருக்கும் இடமே தெரியாத வகையில் இருந்து வருகின்றனர். இதனால், மூத்த தலைவர்கள் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக, கே.டி.ராகவனின் விவகாரத்தில் அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுக்காததும் பெரும் கண்டனத்திற்கு ஆளாகியது. இவ்வாறு பல ஏற்றங்கள், குறைகளை கடந்து இன்றுடன் அண்ணாமலை தலைவராக முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளார்.