‘டெல்லி சென்று திரும்பிய தமிழக எம்.பிக்களுக்கு திடீர் காய்ச்சல்’ தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை..!
’டெல்லி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பங்கேற்ற பல எம்.பிக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது’
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி சென்று திரும்பிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்சலால் பாதிப்பு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஆ.ராசா ஆகியோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் திமுக சார்பில் கனிமொழி பேசியபோது பாஜக எம்.பிக்கள் அவரை பேசவிடாமல் தடுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே மாதிரி திமுக எம்.பி.ஆ.ராசா பேசும்போதும் நாடாளுமன்றத்தில் பாஜகவினர் கூச்சலிட்டனர். ஆ.ராசாவுக்கு ஆதரவாக தயாநிதிமாறன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் கோபத்துடன் பாஜக எம்.பிக்களை பார்த்து முழக்கமிட்டனர்.
ஐந்து நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடருமே மிகுந்த பரபரப்பாக காணப்பட்ட நிலையில், அதனை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய எம்.பிக்கள் பலருக்கும் உடல் அசதி ஏற்பட்டு சோர்வாக காணப்பட்டனர்.
கனிமொழிக்கும் காய்ச்சல் அறிகுறி
திமுக எம்.பி கனிமொழிக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் சென்னையில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அக்டோபர் 14ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்த கனிமொழி ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் மாநாட்டை வீட்டில் ஓய்வில் இருந்தபடியே கனிமொழி ஒருங்கிணைத்து வருகிறார்.
சிகிச்சையில் தமிழச்சி தங்கபாண்டியன்
இதே மாதிரி தென் சென்னை தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்க நேரம் அளித்திருந்த நிலையில், உடல் நலக்குறைவால் அந்த நிகழ்ச்சிக்கு தமிழச்சி செல்லவில்லை. அவரும் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறார்.அதேபோல, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிற்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் திருமா
கடலூர் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 நாட்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். டெல்லியில் இருந்து திரும்பிய திருமா, வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில் அவருக்கும் உடல் அசதி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த நிலையில், காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதால் அவரை மருத்துவனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனடிப்படையில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை எடுத்து வரும் திருமாவளவன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
திடீர் காய்ச்சல் காரணம் என்ன ?
தமிழ்நாட்டில் டெங்கு, கேரளாவில் நிஃபா காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வரும் சூழலில் டெல்லி சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு என்ன மாதிரியான காய்ச்சலால் தமிழக எம்.பிக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் மாஸ்க் அவசியம்
சீத்தோஷ்ண நிலை மாற்றம், வெளி மாநிலங்களில் இருந்து பரவும் வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள மீண்டும் மாஸ்கை மக்கள் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது, தண்ணீரை காய்ச்சி பருகுவது, வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வதன் மூலம் காய்ச்சல் பரவலை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.