Subbulakshmi Jagadeesan: அ.தி.மு.க.வில் இணைகிறாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்..? வதந்திக்கு முற்றுப்புள்ளி.
தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
திமுக முன்னாள் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிமுக-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியானது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக வின் துணை பொதுச் செயலாளர் பதிவியிலிருந்து விலகினார். இந்நிலையில் அதிமுக-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியானது.
மறுப்பு தெரிவித்த சுப்புலட்சுமி ஜெகதீசன்
அதிமுகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து அதிமுகவில் அவர் இணைய உள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், “40 ஆண்டுகளாக திமுகவில் இருந்துள்ளேன், நிச்சயம் அதிமுகவில் சேரமாட்டேன்” என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
செப்.20ஆம் தேதி திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்து விலகல் கடிதத்தை வெளியிட்டார். அதில், “2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.
கலைஞர் மறைவுக்குப்பின், அவர்களின் விருப்பத்தின்படி தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்“ எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி, பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் தோல்வியை தழுவிய நிலையில், தனது தோல்விக்கு ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்த சதி செயலே காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால், அந்தக் கடிதத்தை மு.க.ஸ்டாலின் கண்டுக்கொள்ளாத நிலையில், அதிருப்தியில் இருந்து வந்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன். தொடர்ந்து தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையாவது திமுக தலைமை தரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.
ஆனால், அதுவும் கிடைக்காத நிலையில் கட்சியிலும் மாவட்டத்திலும் செல்வாக்கு இல்லாமல் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் மட்டும் நீடிப்பது சரியாக இருக்காது என்று தன்னுடைய ஆதரவாளர்களிடையே சுப்புலட்சுமி வருத்தப்பட்டதகாவும் தகவல்கள் வெளியாகின.
திமுகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மை செயலாளர் பொறுப்புகளுக்கு பிறகு துணைப் பொதுச்செயலாளர் பதவிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுப்புலட்சுமியை தவிர்த்து திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக தற்போது ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.
மகளிருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவேண்டும் என்ற வகையில் சுப்புலட்சுமிக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை திமுக அளித்த நிலையில், அவர் ராஜினாமா செய்தது உறுதியாகிவிட்டால் அந்த பொறுப்புக்கு நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் மற்றொரு பெண் தேர்வு செய்யப்படுவார். அப்படி திமுக யாரை துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.