'சாதீய சிறுபிள்ளைத்தனத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் சுப்ரமணியசாமி' - பாலா
தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டில் நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தால் விதைக்கப்பட்ட சமூகநீதிக் கொள்கை காரணமாக எந்த ஒரு சமூகத்தின் மீதும் யாரும் தாக்குதலில் ஈடுபட்டது கிடையாது. அனைத்து சமூகத்திற்குமான பரவலான வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழ்நாடு என்று, நோபல் அறிஞர் அமர்த்தியா சென் போன்றோரால் பாராட்டு பெற்ற மாநிலம் இது
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், அங்கு பயிலும் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பு மக்களும் அந்த ஆசிரியருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் எதிராக கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்த ஆசிரியர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் பத்மா சேஷாத்ரி ஆசிரியரையும் பள்ளி நிர்வாகத்தையும் ஆதரிக்கும் விதமாக ஆசிரியர்களும், பூசாரிகளும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக தாக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டு அரசை ஹிட்லர் கால நாஜி அரசோடு ஒப்பிட்டுள்ளார். சுப்ரமணியன் சுவாமியின் கருத்தை பார்க்கும் போது தமிழ்நாட்டை பற்றி எதுவுமே தெரியாத ஒரு நபர், அடிப்படை ஆதாரமின்றி, முற்றிலும் தவறான கருத்தை யாரோ ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் வன்மத்துடன் வெளியிட்டிருப்பதாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டில் நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தால் விதைக்கப்பட்ட சமூகநீதிக் கொள்கை காரணமாக எந்த ஒரு சமூகத்தின் மீதும் யாரும் தாக்குதலில் ஈடுபட்டது கிடையாது. அனைத்து சமூகத்திற்குமான பரவலான வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழ்நாடு என்று, நோபல் அறிஞர் அமர்த்தியா சென் போன்றோரால் பாராட்டு பெற்ற மாநிலம் இது. உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய சமூகம் குறிவைத்து வன்மத்துடன் தாக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் எந்த ஒரு சம்பவமும் நிகழ்ந்தது கிடையாது. அப்படி இருக்கையில், மாணவியிடம் தவறாக நடந்த பேராசிரியரையும் பள்ளி நிர்வாகத்தையும் முதற்கண் கண்டிக்காமல், இந்த விவகாரத்தை திசை திருப்பும் நோக்கோடு செயல்படும் சுப்ரமணிய சாமி, தன்னை உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் என்று கூறிக்கொள்வது வெட்கக்கேடு. மேலும், ஆளுநருக்கு சு.சாமி அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் 356 வது பிரிவை பயன்படுத்துவது தொடர்பாகவும் மேற்கோள் காட்டியுள்ளார். பள்ளி ஆசிரியர் கேவலமாக நடந்தமைக்கு ஒரு மாநில அரசு வழக்கு போட்டிருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசை கலைக்கும் நோக்கத்தை சுப்ரமணியசாமி வெளிப்படுத்தியிருப்பதுதான் ’பச்சை சர்வாதிகாரி ஹிட்லரின்’ செயலுக்கு ஒப்பாகும்.
சுப்ரமணியன் சுவாமிக்களும் வெங்கட்ராமன்களும் தங்கள் விருப்பத்திற்கு மாநில அரசை கலைக்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது என்பது கூட இன்னும் தெரியாமல் பழைய கால நினைவுகளுடனே கனவில் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் எமர்ஜென்சி காலத்திலும், 1976 க்குபின்னர் 1991 ம் ஆண்டிலும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1991 ல் ஆளுநர் அறிக்கை பெறப்படாமலேயே குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசை கலைத்தார். ஆனால் 1994 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
எஸ்.ஆர். பொம்மை வழக்கு என்று சொல்லக்கூடிய அந்த வழக்கில் "356 வது பிரிவை பயன்படுத்தி ஒரு மாநில அரசை கலைக்க முடியாது. மாநில அரசின் நம்பிக்கையை அந்த சட்டமன்றம்தான் தீர்மானிக்கும். மேலும் ஒரு மாநில அரசை கலைக்கும் முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் குடியரசு தலைவர் பெறுவது அவசியம்" என்று அந்த தீர்ப்பு சொல்கிறது. எனவே டெல்லியில் உட்கார்ந்துகொண்டு ஒரு சாமி நினைக்கிறார் அல்லது ஆசாமி நினைக்கிறார் என்பதற்காகவெல்லாம் மாநில அரசை அப்படி கலைத்துவிட முடியாது. மேலும் பொம்மை வழக்கின் தீர்ப்பை கொடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் ரத்னவேல் பாண்டியன், நெல்லை மாவட்ட திமுகவின் முன்னாள் செயலாளர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
எமர்ஜென்சி காலத்தில் அரசியலுக்குள் நுழைந்து, கலைஞரிடம் அரசியல் பயின்ற தமிழ்நாடு முதல்வர், இது போன்ற சாமிகளின் சலசலப்புக்கும் மிரட்டலுக்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டார்; அவரை அப்படி அசைத்துவிடவும் உங்களால் முடியாது. தன் சமூகத்தை சேர்ந்த பாஜக தலைவர் எச்.ராஜா உயர்நீதிமன்றத்தை பற்றி அநாகரிகமாக பேசிய போதும், அதே சமூகத்தை சார்ந்த எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளரை பற்றி இழிவாக பேசியபோதும், கருத்து தெரிவிக்காத சுப்ரமணியசாமி, பள்ளி மாணவிக்கு எதிரான பாலியல் வன்முறை விவகாரத்தில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது அநாகரிகத்தின் உச்சம். இது போன்ற சாதீயசிறுபிள்ளைத்தனத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் சுப்ரமணியசாமி !
Disclaimer : இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகள். ABP நாடு எந்த வகையிலும் பொறுப்பேற்காது.