Sengottaiyan VS EPS: இபிஎஸ்-க்குத்தான் துரோகத்திற்கு நோபல் பரிசு தரனும்.. செங்கோட்டையன் சரமாரி விமர்சனம்!
துரோகத்திற்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
2024 மட்டுமில்ல 2026 மட்டுமல்ல, 2029 தேர்தலிலும் நாங்கள் கூட்டணி இல்லை என்று சொன்னவர் அவர். இவை எதற்காக சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சை பேசிக் கொண்டிருப்பவர் அவர். கோவையில் ஒன்று பேசுகிறார். தஞ்சையில் ஒன்று பேசுகிறார்.
கொடநாடு பற்றி பேசுவது ஏன்?
அதற்கு பிறகு பன்ருட்டியில் ஒன்று பேசுகிறார். ஒவ்வொரு இடத்திலும் பேசும் பேச்சுக்கள் மாற்றமாக இருக்கிறது. இவை எல்லாம் ஏன் இன்று பேசுகிறேன் என்று தெரியும். நான் பொறுப்பில் இருக்கும்போது ஒரு இயக்கத்தைப் பற்றி பேச இயலாது.
கொடநாட்டைப் பற்றி இப்போது பேசுகிறேன் என்றால் கொடநாட்டைப் பற்றி பேசுவதற்கு தகுதி யாரிடம் இருக்கிறது என்றால் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சராக இருக்கிற அவருக்கு மட்டுமே இருக்கிறது. கழக நிர்வாகிகள் அறிக்கை விட இயலாது. அதனால் யாரும் இதை சொல்லவில்லை.,
துரோகத்திற்கு நோபல்:
அம்மா தங்கியிருந்த கொடநாடு இல்லத்தில் நடந்த கொலைக்குற்றங்களுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில் சிந்தாமல் சிதறாமல் இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான் விதியின் அடிப்படையில் என்னை நீக்கவில்லை என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்.
தொடர்ந்து நான் இந்த கட்சியில் இயங்க வேண்டும் என்பதுதான் நோக்கம். துரோகம் என்று சொன்னாலே அதற்கு நோபல் பரிசு தர வேண்டும். அவர் அடிக்கடி திமுகவைப் பார்த்து பொய் சொல்வதில் நோபல் பரிசு கொடுக்கலாம் என்பார். எல்லாரையும் துரோகம் செய்வதில் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க முடியும்.
தற்காலிக பொதுச்செயலாளர்:
இவர் இப்போது தற்காலிக பொதுச்செயலாளர்தான். இவர் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை. தலைவர் காலம் முதல் தீவிர உறுப்பினராக இருந்த என்னையே நீக்கியிருப்பது வழக்கறிஞர் மூலமாக கேட்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் செங்கோட்டையன் அவர்களுடன் ஒன்றாக தேவர் ஜெயந்தி பூஜையில் பங்கேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அதிரடி விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி மீது முன்வைத்துள்ளார்.





















