உள்நாட்டில் மருத்துவம் பயிலுங்கள்.. உக்ரைன் பதற்றநிலைக்கு இடையே மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த பிரதமர் மோடி
இந்திய மாணவர்கள் சிறிய நாடுகளில் மருத்துவக் கல்வி பயில சென்றிருப்பதைச் சுட்டிக்காட்டி பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனியார் நிறுவனங்கள் இந்தத் துறையில் களமிறங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மொழி என்ற தடையையும் கடந்து பல்வேறு இந்திய மாணவர்கள் மிகச் சிறிய நாடுகளில் மருத்துவக் கல்வி பயில சென்றிருப்பதைச் சுட்டிக் காட்டி பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனியார் நிறுவனங்கள் இந்தத் துறையில் களமிறங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சுகாதாரத்துறைக்கான பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசுகள் மருத்துவக் கல்விக்காக நிலம் ஒதுக்க நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும், அதன் மூலம் இந்தியாவில் அதிகளவிலான மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் உருவாகி சர்வதேச அளவில் பணியாற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் பெருமளவில் அங்கு சிக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார். எனினும், உக்ரைன் நாட்டில் இந்திய மாணவர்களுக்கு நேர்ந்து வரும் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி எதையும் சுட்டிக்காட்டவில்லை.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி கற்பதற்காகவும், குறிப்பாக மருத்துவம் கற்பதற்காகவும் செல்வதைச் சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இதன் மூலமாக நாட்டை விட்டு பல கோடி ரூபாய் பணம் வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
`நமது குழந்தைகள் கல்வி கற்பதற்காக, குறிப்பாக மருத்துவ கல்விக்காக, சிறிய நாடுகளுக்குச் செல்கின்றனர். அங்கு மொழி அவர்களுக்குப் பெரிய தடையாக இருக்கிறது. அப்படியும் அவர்கள் அங்கு செல்கிறார்கள். நமது தனியார் துறையினர் இந்தத் துறையில் பெரியளவில் காலடி வைக்க முடியாதா? நமது மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நில ஒதுக்கீடு மேற்கொள்வதற்காக நல்ல திட்டங்களை வகுக்க முடியாதா?’ எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தத் துறையில் இந்தியா அதிகளவிலான லாபத்தை அதன் புவியியல் காரணங்களுக்காக பெற முடியும் எனவும், இந்திய மருத்துவர்கள் கடந்த பல பத்தாண்டுகளாகத் தங்கள் பணியின் காரணமாக நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த ஆன்லைன் கருத்தரங்கத்தில் பிரதமர் மோடி, மக்களுக்கு தரமான மருத்துவம், சிகிச்சை முதலானவற்றை வழங்க அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்துப் பேசியுள்ளார். `ஒரே இந்தியா, ஒரே ஆரோக்கியம்’ என்ற கொள்கையோடு மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும், அதனால் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைத்திருப்பதோடு, தரமான மருத்துவம் என்பது பெரிய நகரங்களில் வாழ்பவர்களுக்கு மட்டும் இல்லை என்பதை உறுதி செய்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உக்ரைனில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் பலரும் போர் சூழலில் இருந்து தப்பிக்க உக்ரைன் - போலாந்து எல்லையை நோக்கி பயணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.