PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
ராமதாஸ் தலைமையில் இன்று சேலத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுக்க உள்ளார்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று பாமக. வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக-வில் தற்போது தந்தை ராமதாஸிற்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடக்கும் சண்டையால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது? யாருடன் கூட்டணி? என்பதே இவர்களின் மோதலுக்கான பிரதான காரணம் ஆகும்.
பாமக பொதுக்குழு:
பாமக தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் மாறி, மாறி உரிமை கொண்டாடி வரும் நிலையில், ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடட்டம் நடந்து வருகிறது. சேலத்தில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. காலை 11.30 மணி வரை நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணிப்பா?
பாமக-வின் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேருக்கு இதில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. கட்சியில் அன்புமணியின் ஆதரவாளர்கள் பலரும் இருப்பதால் அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் இதில் பங்கேற்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவை புறக்கணிக்க வாய்ப்புகள் உள்ளது.
கூட்டணி முடிவு:
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, ராமதாஸ் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணியும், திமுக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாசும் ஆர்வம் காட்டி வருவதும் அவர்களுக்கான மோதலுக்கான முக்கிய காரணம் ஆகும். இந்த சூழலில் இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் முக்கிய முடிவு எடுக்க உள்ளார்.
ராமதாஸ் இன்று பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராகவும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்றே கருதப்படுகிறது. மகன் அன்புமணிக்கு எதிராக மகள் காந்திமதியை களமிறக்கியுள்ள ராமதாஸ், அவருக்கு இந்த பொதுக்குழுவில் அதிக முக்கியத்துவம் அளிப்பார் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.
தொடரும் சமாதான முயற்சி:
ராமதாஸை சமாதானப்படுத்தி தங்கள் பக்கம் கொண்டு வர அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அன்புமணி - ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக-வின் மாம்பழ சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.
இதனால், இவர்களின் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து தேர்தலை இணைந்தே சந்திக்க வேண்டும் என்று பாமக-வின் தொண்டர்கள் விரும்பி வருகின்றனர்.





















