பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பா.ஜ.க. காரணம் அல்ல - நடிகை கவுதமி
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. காரணம் அல்ல என்றும், விலை உயர்வு பற்றி இப்போது பேச வேண்டியதில்லை என்றும் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
நடிகையும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான நடிகை கவுதமி பாண்டிச்சேரியில் இன்று பா.ஜ.க.விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரப்போகும் அமோக வெற்றி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. பா.ஜ.க. தலைவர்களின் கொள்கைகளைப் பார்த்து 24 ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜ.க.வில் இணைந்தேன். நமது நாட்டுக்கு ஏற்ற கட்சி பா.ஜ.க.தான். அதனால்தான் பா.ஜ.க.வில் இணைந்தேன்.
புதுச்சேரி மக்களுக்கு ஒரு நியாயமான ஆட்சி தேவைப்படுகிறது. அந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அளிக்கும். இந்த ஆட்சியால் புதுச்சேரிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும். கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. பொறுப்பல்ல. மத்திய அரசு மட்டும் காரணம் அல்ல. மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது. இதுபற்றி பொருளாதாரம் மற்றும் நிதித் துறை சார்ந்தோரிடம் கலந்து பேசினால் தெளிவு கிடைக்கும். விலை உயர்வு பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. மக்களுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.