அரசு பங்களா; இபிஎஸ் ‛இன்’... ஓபிஎஸ் ‛அவுட்’ !
எதிர்கட்சி தலைவர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அவர் அங்கேயே தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன் பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பங்களாவில் தங்க அனுமதி கோரியிருந்த நிலையில், பங்களாவில் அவர் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் தான் முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் , அரசு அதிகாரிகள் உள்ள்ளிட்டவர்கள் தங்குவார்கள். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, இங்குள்ள பங்களாவில் தான் தங்கி வந்தார். இந்நிலையில். அவர் 2011ஆம் ஆண்டு முதல் தான் தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அவர் அங்கேயே தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இங்குள்ள பங்களாவில் தான் தங்கி வந்தார். ஆனால் அவர் அங்கிருந்து காலி செய்ய முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் சமீபத்தில் அவரின் சகோதரர் மறைந்ததால், பங்களாவை முழுமையாக காலி செய்ய அரசிடம் அவகாசம் கேட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்காளக்களை ஏற்கனவே காலி செய்துவிட்டனர். பங்களாக்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்காளக்களை பொதுப்பணித்துறை ஒப்படைக்கும். ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் போதும்,முதல்வரிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் வரை தங்குவதற்கு விடுதி தருவது வழக்கமான நடைமுறை தான். இருந்தாலும் முதல்வர், அமைச்சர்களுக்கு தரப்படும் பங்களாக்கள் எம்.எல்.ஏ.,க்கள் விடுதியை விட வசதியாக இருக்கும். முறையான பராமரிப்பு, கண்காணிப்பு போன்ற அம்சங்களும் அதில் இடம்பெற்றிருக்கும் என்பதால் அது ஒரு சொகுசு வாழ்க்கைக்கு உரிய வகையில் அமைந்திருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி தொடர்ந்ததால் பெரும்பாலான அமைச்சர்கள் ஒரே பங்களாவையே பயன்படுத்தி வந்தனர். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றிருப்பதால் இம்முறை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை தற்போதைய அமைச்சர்களுக்கு ஒதுக்க உள்ளனர். அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் தங்கிய பங்களாவை பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மட்டும் தொடர்ந்து அங்கு தங்க உள்ளார். அதேநேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது பங்களாவை பயன்படுத்த எந்த அனுமதியும் கோரவில்லை எனத்தெரிகிறது . அதனால் தான் அதை காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர் என்பதால் அவரது கோரிக்கைக்கு அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ் தற்போது சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே என்பதால் அவர் முறையிட வாய்ப்பு குறைவு என்றும் தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.