”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”2026-ல் திமுகவின் ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சத்தால், இணைப்பு பேச்சு வார்த்தையை முன்னெடுத்த.எஸ்.பி.வேலுமணி மீது நெருக்கடி கொடுப்பதற்காக, தமிழக அரசு அவசரமாக வழக்கு பதிவு செய்துள்ளது” - ஜெயபிரதீப்
சசிகலா – தினகரன் – ஓபிஎஸ் – எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சித்ததாகவும் அதனை செயல்படுத்தவிடாமல் தடுக்கவே அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை புதிய வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
ஓபிஎஸ் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு
இது தொடர்பாக, முன்னாள் முதல்வரும் தொண்டர் உரிமை மீட்பு அணி உருவக்கியவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ”அஇஅதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, தனித்தனியாக பிரிந்து இருக்கும் மாண்புமிகு அம்மா அவர்களின் சக்திகளை ஒன்றிணைப்பதற்காக கழகத்தின் மூத்த தலைவர்கள் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பேசினர் என்று செய்திகள் வந்தது.
இதனை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட திமுக தலைவர், அஇஅதிமுக-வின் சக்திகள் ஒன்றிணைந்தால் 2026-ல் திமுகவின் ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சத்தால், இணைப்பு பேச்சு வார்த்தையை முன்னெடுத்த முன்னாள் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது நெருக்கடி கொடுப்பதற்காக, தமிழக அரசு அவசரமாக வழக்கு பதிவு செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் இத்தகைய பிரித்தாலும் சூழ்ச்சியை உணர வேண்டும்.
அனைவரும் இனிமேலும் ஒற்றுமையாக செயல்படாமல் இருந்தால் புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் பாதுகாக்கப்பட்டு, உண்மை தொண்டர்களால் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட நமது கழகத்தை தோல்வியிலிருந்து மீட்டெடுப்பது மிகவும் சிரமமாகிவிடும் என்று கழகத்தின் 24 ஆண்டு கால உண்மை தொண்டனாக மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி மீது புதிய வழக்கு
இந்நிலையில், நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலும் மணி மீது 26 கோடி ரூபாய் அளவில் டெண்டரில் மோசடி செய்திருப்பதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2019ம் ஆண்டு மழை நீர் வடிகால் பணிகளுக்கு டெண்டர் விட்டதில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இதில் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சித்தாரா வேலுமணி
சமீபத்தில் வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சசிகலா, தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை இணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்றும் 2026ல் நீங்களே முதல்வர் வேட்பாளராக இருக்கலாம் என்றும் கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லையென்றும் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தால் கட்சி மீது இருக்கும் தன்னுடைய பிடி விட்டுப்போய்விடும் என அவர் அச்சப்படுவதாக சில அரசியல் விமர்சகர்களும் பேசியிருந்தனர்.
இந்த சந்திப்பு நடந்ததாக பலரும் பேசிய நிலையில், அதனை அதிமுக தலைவர்கள் யாரும் மறுக்கவில்லை. இதனால், இந்த சந்திப்பு நடந்ததாகவே இப்போதும் நம்பப்படுகிறது. இந்நிலையில்தான், எஸ்.பி.வேலுமணி மீது வழக்குகள் பதிந்து அவரின் செயல்பாடுகளை முடக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாக ஜெயபிரதீப் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.