அமைச்சரையே மதிக்காத அதிகாரிகள்? புதுக்கோட்டையை அலறவிடும் விஜயபாஸ்கர்- பின்னணி இதுதான்!
நான் எனக்காக எதையும் கேட்கவில்லை. ஏழை எளிய மக்களுக்காகத்தான் கேட்கிறேன். இதுபோன்ற அரசுத் திட்டங்களை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்.
அதிகாரிகள் எது சொன்னாலும் கேட்பதே இல்ல, ஏதாவது சொன்னால் அலட்சியப்படுத்துகிறார்கள் என வெளிப்படையாகவே பேசியுள்ளார் அமைச்சர் மெய்யநாதன். புதுக்கோட்டையில் அதிகாரிகள் இன்னும் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக பேச்சு நிலவும் சூழலில், அமைச்சரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாஞ்சன்விடுதி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மேடையிலேயே வைத்து அதிகாரிகள் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை என உடைத்துப் பேசினார்.
அவர் கூறும்போது, ‘’மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி கேட்டு நானே நேரடியாக பேசினாலும் எந்த நடவடிக்கையும் இல்லை, நான் எனக்காக எதையும் கேட்கவில்லை. ஏழை எளிய மக்களுக்காகத்தான் கேட்கிறேன். இதுபோன்ற அரசுத் திட்டங்களை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்’’ என மேடையிலேயே வைத்து புலம்பினார். இது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது.
அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா?
அமைச்சர் சொல்வதையே அதிகாரிகள் கேட்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் டார்கெட் செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது, அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணுவை அழைத்து வந்து பாவ புண்ணிய வகுப்புகளை எடுத்தது உள்ளிட்ட விவகாரங்களில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா என்ற விமர்சனம் எழுந்தது.
விஜயபாஸ்கர் சொல்வதே வேதம்?
இந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் நேரடியாக சொல்லியும் கேட்காததால் பொதுவெளியிலேயே சொல்லி கறார் காட்டியிருக்கிறார். இதன் பின்னணியில் அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை முக்கிய புள்ளிகள் விஜயபாஸ்கரின் கண்ட்ரோலில் இருப்பதுதான் இந்த பிரச்னைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 2021 தேர்தலில் அதிமுகவினர் பலர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் விராலிமலை தொகுதியில் வெற்றியை வசமாக்கினார் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை வட்டாரத்தில் அமைச்சர் மெய்யநாதனை காட்டிலும், விஜயபாஸ்கர் சொல்வதே எடுபடுவதாக பேச்சு இருக்கிறது.
மெய்யநாதன் அதிகாரிகளின் அலட்சியத்தை மேடையிலேயே சொல்லி விட்டதால் தற்போது வேலைகள் ஒழுங்காக நடக்க ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர். அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றுள்ளதால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வேலைகளும் நடக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.