'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தும் திருட்டுத்தனம்: - சீமான் கொதிப்பு!
தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, 'திராவிடக் களஞ்சியம்’ என் அடையாள மாற்றம் செய்ய முயனும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும் - சீமான்

சங்கத் தமிழ் இலக்கியங்களை, எளிய தொகுப்பாக வெளியிடப்போவதாகவும் இதற்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டப்போவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார்.
இது தமிழ்தேசியக் கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு 'திராவிடக் களஞ்சியம்' எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, 'திராவிடக் களஞ்சியம்’ என் அடையாள மாற்றம் செய்ய முயனும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும்.
சங்கத்தமிழ் இலக்கியங்களை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது!https://t.co/0oSDbJ9CA4 pic.twitter.com/JLKZY6gL9d
— சீமான் (@SeemanOfficial) September 1, 2021
மனு ஸ்மிருதியிலிருந்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான. 'திராவிடம்' என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும். அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ. பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத 'திராவிடம்' எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது.
ஆகவே. சங்கத்தமிழ் இலக்கியங்களை 'திராவிடக் களஞ்சியம்' என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை. 'தமிழ்க் களஞ்சியம்' என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே தமிழ்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார், “சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, எளிய தொகுப்பாக வெளியிடப்போவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார். அந்த சங்கத் தமிழ்த் தொகுப்புக்கு “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டப் போவதாகவும் அதில் அறிவித்திருக்கிறார்.சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் “திராவிட” என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறிருக்க, வலிந்து சங்கத் தமிழ் நூல்களுக்கு “திராவிடக் களஞ்சியம்” என்று தி.மு.க. ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும். சங்கத் தமிழ் நூல்களைத் “திராவிடக் களஞ்சியம்” என்று மக்களிடம் அறிமுகப்படுத்துவது தமிழ் மொழி மற்றும் தமிழ் இனம் இரண்டையும் மறைக்கும் செயலாகும்! ’ஒருவர் கையைக் கொண்டே அவர் கண்ணைக் குத்து!’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

