Seeman: " ஆளுநர் ஆர்.என்.ரவி கீழ்ப்பாக்கத்துல இருக்க வேண்டியவரு" சீமான் பேச்சால் சர்ச்சை!
நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரு கண்கள் என்று கூறினார். விஜய்யின் இந்த கருத்து சீமான் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு எதிராக சீமான் சரமாரியாக கருத்துக்ளை கூறி வருகிறார். இன்று விஜய்க்கு எதிராக கருத்துக்களை நிருபர்களிடம் கூறும்போது சீமான் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
எது ஜனநாயகம்?
அவர் கூறியதாவது, “ஆளுநர் பதவி வேண்டாம் என்று சொல்வதில் ஒன்றும் இல்லை. ஆளுநர் தேவையில்லை என்று விளக்கம் சொல்ல முடியுமா? நான் சொல்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நாட்டின் முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம். ஒரு நியமன உறுப்பினருக்கு இருக்கிறது என்றால் என்ன ஜனநாயகம்? இந்த கேள்வி உங்களிடம் உள்ளதா?
சும்மா ஆளுநர் வேண்டாம் என்றால் ஏன் வேண்டாம். 8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லாத அதிகாரம், ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற கையெழுத்து இடுங்கள் என்று சொன்னால் ஒற்றை கையெழுத்தை இடாத தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல சட்டங்கள், திட்டங்கள் உறங்குதா? இல்லையா?
கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்:
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம்? நியமிக்கப்பட்ட ஒருவருக்கு உள்ளதா? அதுவும் பா.ஜ.க. ஆள்கிறது என்றால் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து குடைச்சல் கொடுப்பது. அப்படித்தான் கிரண்பேடி அங்க நாராயணசாமியை கடைசி வரை தூங்கவிடவில்லை. இங்க எல்லாம் பார்க்கிறீர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி படுத்தும் பாடை.
கீழ்ப்பாக்கம் மாளிகையில் இருக்க வேண்டியவரை ஆளுநர் மாளிகையில் உட்கார வைத்து, அரை பைத்தியங்களை கொண்டு வைத்துவிட்டு சேட்டை பண்ணுவார்கள். அதை முதலில் தூக்க வேண்டும். அதற்கு முதலில் காரணம் சொல்ல வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.,