Seeman: "தம்பி வேறு! கொள்கை வேறு! எதிரிதான்" விஜய்க்கு எதிராக கொதித்தெழுந்த சீமான்!
தம்பி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று விஜய் மீது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கொள்கைகளை சீமான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், இன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா?
அப்போது, அவர் கூறியதாவது, “பாலச்சந்திரன் நெஞ்சில் 5 குண்டுகளை தாங்கி மரணித்துக் கிடந்தபோது பதறித்துடிக்கும் தமிழ் தேசியம். அதேநேரம் சிறிதும் பதற்றமின்றி பதவியேற்கும் திராவிடம். இரண்டும் ஒன்றா? திராவிடம் பெண்ணிய உரிமையை பேசும். ஆனால், தமிழ் தேசியம் பெண்ணிய உரிமையை கொடுக்கும். இரண்டும் ஒன்றா?
இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் கண் என்கிறார். அதெப்படி இரண்டும் சமம் என்று சொல்ல முடியும். மொழியில் இரு மொழிக் கொள்கை. அடுத்தவன் மொழி எப்படி எனக்கு மொழிக் கொள்கையாக இருக்க முடியும். எங்கப்பாவும் அப்பா. அடுத்தவன் அப்பாவும் அப்பாவா? எனக்கு கொள்கை மொழி தமிழ். உலகெங்கும் அவனவனுக்கு கொள்கை மொழி அவனது தாய் மொழி.
ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
உலக மொழிகளுக்கு நாங்கள் பற்றாளர்கள். எங்கள் மொழிகளுக்கு நாங்கள் உயிரானவர்கள். தமிழ் பயிற்று மொழி. ஆங்கிலம் கட்டாய பாட மொழி. உலகத்தின் எல்லா மொழியும் எங்கள் பாட மொழி இந்தி உட்பட. மொழி வேண்டும் என்றால் கற்றுக் கொள்வோம். தமிழே எங்கள் மொழி என்பதே எங்கள் கொள்கை மொழி.
தமிழ் தேசியம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? விளக்கம் யார் சொல்வார்கள்? தலைவரா? கீழே இருப்பவர்களா? மதச்சார்பற்ற சமூக நீதி. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு. அவர்களுக்கு ஏற்கிறீர்களா? எதிர்க்குறீர்களா? அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு. அதை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
கொள்கை உறவு:
தி.மு.கவும்தான் நீண்ட காலமாக சமூக நீதி பேசுகிறது. அது ஜமுக்காள நீதி. பெண்ணிய உரிமையை பேசிக் கொண்டே இருக்கிறது. கொடுத்திருக்கிறதா? அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் பெண் உள்ளனர். ஆணும், பெண்ணும் சமம் என்பதே தமிழ் தேசியம். மதுக்கடையை மூடச் சொல்லுது தமிழ் தேசியம். தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறப்பது திராவிடம். எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்.
தம்பி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கொள்கைக்கு எதிராக நின்றால் எதிரி எதிரி ஆகும். கடவுளே ஆனாலும் எதிராக இருந்தால் எதிரியே ஆகும். நாம் தமிழர் தமிழ் தேசியத்தின் லட்சியத்துடிப்பில் வாழ்பவர்கள். குடும்ப உறவைக் காட்டிலும் கொள்கை உறவே மேலானது.
காங்கிரஸ் மிதவாதமா?
காங்கிரஸ் தமிழினத்தின் வரலாற்று பகைவன். இந்த நாடு இந்தளவு ஏழ்மையில் சிக்கித் தவிப்பதற்கு பொறுப்பேற்க வேண்டியது காங்கிரஸ். நீங்கள் எதிர்க்கும் நீட், ஜி.எஸ்.டி. ஆகியவற்றை கொண்டு வந்தது யார்? என் கண் முன்னே லட்சக்கணக்கான என் இன மக்களை கொன்று குவித்தவன் காங்கிரஸ். அமைதிப்படை என்ற பெயரில் அநியாய படையை அனுப்பி என் மக்களை கொன்று குவித்தது காங்கிரஸ்.
கச்சத் தீவை தான்தோன்றித் தனமாக எடுத்துக் கொடுத்தது காங்கிரஸ். காவிரி நீர் விவகாரத்தில் கருணாநிதி தொடுத்த வழக்கை திரும்ப பெற வைத்தவர் இந்திராகாந்தி. பதவிக்காக பயந்து இவர் வழக்கைத் திரும்ப பெற்றார். பா.ஜ.க. மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா? ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பாபர் மசூதியை இடிப்பான். காங்கிரஸ் இடிக்க அனுமதிப்பான். இடிக்கும்போது யாருடைய ஆட்சி? நரசிம்மராவ்வின் காங்கிரஸ் ஆட்சி. பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. வாழ்த்து சொன்னார் ராகுல் காந்தி. எதில் நீ வேறுபாடுகிறாய்?
விடுதலையா? பிரிவினையா?
காங்கிரஸ் சகிக்க முடியாத ஊழல். இந்தியை வலுக்கட்டாயமாக திணித்தது காங்கிரஸ். அணு உலையை கொண்டு வந்து வைத்தது யார்? அ.தி.மு.க.ஊழல் இல்லையா? சாதி, மதமும், மொழியும், இனமும் ஒன்றா? இந்து முஸ்லிம் கிறிஸ்தவன் அடையாளம் இல்லை. இங்கிலாந்தும், அயர்லாந்தும் பிரிவினையா? விடுதலையா? சிங்களத்திடம் இருந்து தனி நாடு கேட்டது பிரிவினையா? விடுதலையா?மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதா? சாதிவாரி மொழி பிரிக்கப்பட்டுள்ளதா? கொள்கையை மாத்து. இல்லாவிட்டால் எழுதிக் கொடுப்பதை மாத்து.”
இவ்வாறு அவர் பேசினார்.