பிரதமரோ, ஆளுநரோ தமிழருக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது - துரை வைகோ
’’ஆளுநர் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல், ஜனநாயக படுகொலை’ என்றார்.
தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் தமிழக ஆளுநர், பிரதமர் என யார் ஈடுபட்டாலும் இங்கு ராணுவே வந்தாலும் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு கிடையாது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்தும், கட்டிட வசதிகள் குறித்தும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். இதனை தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அந்த அரசு இந்தியாவைதான் நாடியுள்ளது. இலங்கையில் உள்ள ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இதற்கு முன்பு இருந்த பிரதமர்களை விட பிரதமர் மோடிக்கு உள்ளது. காரணம் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலை என்றும், இந்திய அரசு என்ன சொன்னாலும் இலங்கை கேட்க கூடிய சூழ்நிலை உள்ளது. மற்ற பிரதமர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை, எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் பிரச்சினை, ஈழ தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
”தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க கச்சதீவை மீட்க வேண்டும் அல்லது அதனை சுற்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்யும் வகையில் ஒப்பந்தம் போடவேண்டும், இலங்கையில் வடகிழக்கு மாகாண பகுதியில் வாழும் தமிழர்களுக்கு குறைந்தபட்ச உரிமைகளை பெற்று தர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதை விட்டு, விட்டு கடந்தகால பழைய கதைகளை பேசி மலிவான அரசியல் பண்ணுவது ஆரோக்கியமான அரசியல் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நீட் பிரச்சினை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பிரச்சனை முடிவு எடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 11 கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கமால் ஆளுநர் அப்படியே வைத்துள்ளார். ஆளுநர் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல், ஜனநாயக படுகொலை” என்றார்
”தமிழக ஆளுநராக இல்லை, தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்று செயல்படுகின்றரோ அன்றைக்கு முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என்றும், தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் தமிழக ஆளுநர், பிரதமர் என யார் ஈடுபட்டாலும் இங்கு ராணுவே வந்தாலும் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு கிடையாது என்றும், தமிழகத்தில் எல்லா மதத்திற்கும் இடம் உள்ளது.அனைவருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பதுதான் திராவிட அரசியல், மதவாத அரசியலுடன் திராவிட அரசியலை இணைத்து பேசு கொச்சைப்படுத்துவது போன்றது என்றும், பாஜகவினர் சில யுக்திகளை பயன்படுத்தி மக்களை குழப்பி தவறான சிந்தனையை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அது தமிழகத்தில் நடக்காது. வட இந்தியாவில் ராம் நவமி, அனுமான் நிகழ்ச்சிகளில் வன்முறை நடைபெற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன. தமிழகத்தில் கள்ளழகர் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். எவ்வித பிரச்சனையும் இல்லை” என்றார்.