முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை; புறக்கணித்த வைகோ : திமுகவின் நிலைப்பாடு என்ன?
அண்ணாமலை கலந்து கொள்ளும் கருத்தரங்கை தலைவர்கள் புறக்கணித்து வரும் நிலையில், திமுக, காங்கிரஸ், விசிக, பாமக, தவாக மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் - கருத்தரங்கம் வரும் 14ஆம் தேதி தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நினைவேந்தல் கருத்தரங்கத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் ராதாபினோடு கொய்ஜம், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, விசிக எம்.பி. ரவிக்குமார், பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் மதிமுக, அமமுக, எஸ்டிபிஐ, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருப்பதாக வெளியிடப்பட்ட அழைப்பிதழ் சமூக வலைத்தளங்கில் வைரல் ஆனது.
அண்ணாமலைக்கு அழைப்பு - பங்கேற்பாளர்கள் எதிர்ப்பு
7 தமிழர் விடுதலையை பாஜக எதிர்க்கும் நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை எப்படி அழைக்கலாம் என வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தலைவர்கள் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரும் இடம்பெற்று இருப்பதால், கருத்தரங்கை புறக்கணிப்பதாக பெரியார் திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மே 17 இயக்கமும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்தது.
நிகழ்ச்சியை புறக்கணித்த வைகோ
இது தொடர்பாக ட்வீட் செய்திருந்த திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, பட்டியலில் காணும் தலைவர்களில் சிலர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மீதோ, அதன் தொடர்ச்சியாக ஈழ மக்கள் படும் துயரம் குறித்தோ, அந்த மக்களுக்கு ஓர் நிரந்தர அமைதியான தீர்வைத் தேடித் தர வேண்டும் என்ற அக்கறையோ அற்றவர்கள் என்பதோடு, திதி திவசம் போல் கருதிக்கொண்டு அதில் கலந்து கொள்வதாகவே நான் புரிந்து கொள்கிறேன். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் யாரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மதிமுகவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
திமுக புறக்கணிக்குமா?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கை அரசியல் கட்சித் தலைவர்கள் புறக்கணித்து வரும் நிலையில், திமுக, காங்கிரஸ், விசிக, பாமக, தவாக மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.