’அண்ணாமலை மீது வழக்கா?’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பதில்..!
’அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளித்திருக்கிறோம். இனி இதுபோன்ற ஆதாரமற்ற புகார்கள் சொல்வதை அவர் குறைத்துக்கொள்ள வேண்டும்’
கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் ’ஹெல்த் மிக்ஸ்’ பெட்டகத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருந்தார். ஆனால், இதனை உடனடியாக மறுத்து நேற்றே பேட்டிக் கொடுத்திருந்தார் தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
நேற்று பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான தி,நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் பெட்டகத்தில் முறைகேடு நடத்திருப்பதாகவும், அதேபோல் ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு மட்டும் விதிகள் தளர்த்தப்பட்டு விரைவாக அனுமதி வழங்கப்படுவதாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
.@BJP4TamilNadu had exposed large scale irregularities in granting permission for land projects to @CMOTamilnadu family linked company G Square.
— K.Annamalai (@annamalai_k) June 5, 2022
CDMA, DTCP and every single institution is acting on the behest of one family to favour this one company in TN - G Square! pic.twitter.com/BCgbpmXxIE
இந்நிலையில், அண்ணாமலையின் முறைகேடு புகார் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆவின் ஹெல்த் மிக்ஷ் என்பது குழந்தைகளுக்கான, கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துகள் அதில் இல்லை என்பதாலேயே தனியாரிடம் இருந்து அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிரம்பிய மகளிருக்கான பிரத்யேக ஹெல்த் மிக்ஷ் கொள்முதல் செய்யப்படுவதாக விளக்கம் அளித்தார்.
அதோடு, அண்ணாமலை சொல்லிய இந்த குற்றச்சாட்டு என்பது அடிப்படை ஆதரமற்றது என்றும் இது அரசின் நற்பெயருக்கு களங்கும் விளைக்கும் முயற்சி என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினார். அதேபோல், பொருட்களின் தரம் மற்றும் சரிபார்ப்பே இன்னும் முடிவடையாதபோது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்டோரும் பொருட்கள் வாங்கப்படும் விவரங்கள், கருத்துருக்கள் என எல்லா விவரங்களும் வெளிப்படையாக இருப்பதகாவும் தெரிவித்தனர். ஆவின் உள்ள ஹெல்த் மிக்ஷில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, தனியார் நிறுவனத்திடம் பெறப்படும் ஹெல்த் மிக்ஷ்னின் விலை மற்றும் அதன் உள்ளீட்டு பொருட்கள் என அத்தனை குற்றச்சாட்டுக்கும் அடுக்கடுக்கான விளக்கங்களை இருவரும் செய்தியாளர் சந்திப்பில் தந்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார் என புகாரை முன் வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தவறான தகவலை கொடுத்ததற்காக அண்ணாமலை மீது வழக்கு தொடக்கப்படும் என்றோ இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ எதுவும் சொல்லாத நிலையில், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனை தொடர்புகொண்டு கேட்டோம்.
அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய LED digital தகவல் பலகை,Bed sores சிகிச்சைக்காக 10 பிரத்யேக படுக்கை வசதிகள்,கருவிழி தானம் பெறும் மையம்,Anesthesia workstation ஆகியன திறந்து வைக்கப்பட்டு,மாணவர் மன்றம் மற்றும் மனநல புத்தாக்கத் திட்டம தொடங்கி வைக்கப்பட்டது. pic.twitter.com/KdtCTHkn8U
— Subramanian.Ma (@Subramanian_ma) June 6, 2022
அதற்கு அவர் ’அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறோம். இதன்பிறகு இதுமாதிரியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சொல்வதை அவர் குறைத்துக்கொள்ள வேண்டும் ; இல்லையெனில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.