கடுப்பான எச்.ராஜா... கலாய்த்த செந்தில் பாலாஜி... என்ன நடந்தது?
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் திமுக அரசை சரமாரியாக ஒவ்வொரு விவகாரங்களிலும் விமர்சித்து வருகிறார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் ட்விட்டர் பதிவுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டை கடந்துள்ள நிலையில், அரசு தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜகவின் பல்வேறு தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச விழா தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களில் அரசை கடுமையாக விமர்சித்தனர்.
அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் திமுக அரசை சரமாரியாக ஒவ்வொரு விவகாரங்களிலும் விமர்சித்து வருகிறார். அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் TNEB என ஓரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வாகனத்தின் படத்தை பதிவிட்டுள்ளார். அந்த வாகனத்தில் நடுவில் Jesus Travels என ஸ்டிக்கர் இடம் பெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு ”கிறித்தவமயமான TNEB” என தெரிவித்திருந்தார்.
கிறித்தவமயமான TNEB pic.twitter.com/oGdKzBUrL4
— H Raja (@HRajaBJP) June 14, 2022
இந்நிலையில் எச்.ராஜாவின் ட்விட்டர் பதிவுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ளார். அவர் தனது பதிவில், “ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. வாகன எண் 0052'ஆக இருக்காது என நம்புகிறேன். வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும்..” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து திமுக அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏதோ காரணங்களால், வாகன பதிவு எண்ணை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணன் எச்.ராஜா. வாகன எண் 0052'ஆக இருக்காது என நம்புகிறேன்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 14, 2022
வாகன எண்ணை கூறினால், அது ஒப்பந்த அடிப்படையிலான வாகனமா, ஊழியருடைய வாகனமா இல்லை வழக்கமான போட்டோஷாப் வேலையா என சொல்ல இயலும்.. https://t.co/mLFxanqvaK
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்