‘அண்ணாமலை மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
"தகுதியில்லாத, எந்த விதமான மக்கள் நலனில் அக்கறை இல்லாத, மக்களுக்கான பணிகளை செய்யாத அந்நபர் பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் தன் இருப்பை காட்டுகிறார்.”
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “முதலமைச்சரின் 70 வது பிறந்த நாள் விழாவை கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட உள்ளோம். இவ்விழா ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் கொண்டாட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 5 ம் தேதி கோவைக்கு வருகை தந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 5 ம் தேதியன்று 10 மணியளவில் கொடிசியா மைதானத்தில் 70 ஜோடிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைக்க உள்ளார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாட்டு வண்டிய பந்தயம் போட்டி, திமுக பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்” எனத் தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விக்கு, “அந்த நபர் பற்றி கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டாம். இவ்வளவு வீர வசனம் பேசுகிறீர்களே, தமிழ்நாட்டில் பாஜக உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு? ரபேல் வாட்ச் பில் எங்கே? என நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரவில்லை.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பது தொடர்பாக பேசிய அவர், அரவக்குறிச்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் பணம் கொடுத்தார். ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தும், எடுபடாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். அதேபோல மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் நேற்று ஒரு கருத்தை சொல்லியிருந்தார். அவர் மொடக்குறிச்சியில் என்ன கொடுத்து, எப்படி வந்தார் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். பொதுவெளியில் குறை சொல்லும் போது நாம் எப்படி இருக்கிறோம், நாம் எப்படி செயல்படுகிறோம், நாம் சார்ந்து இருக்கும் இயக்கத்தின் நிலை என்ன என்பதை உணர்ந்து பேச வேண்டும். அரவக்குறிச்சியில் பணம் கொடுத்தீர்களா?, இல்லையா? இல்லாத மனிதனை, இல்லாத ஒரு கட்சியை, நோட்டா உடன் போட்டி போடும் ஒரு கட்சியை செல்வாக்கு இருப்பது போல மாயத்தோற்றத்தை உருவாக்க பத்திரிகையாளர்கள் துணை போக வேண்டாம்.
தகுதியில்லாத, எந்த விதமான மக்கள் நலனில் அக்கறை இல்லாத, மக்களுக்கான பணிகளை செய்யாத அந்நபர் பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் தன் இருப்பை காட்டுகிறார். ஒரு கேள்விக்காவது பதில் சொல்லியுள்ளாரா? குற்றச்சாட்டு சொல்வதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளார். நோட்டாவுடன் போட்டி போடுபவர்களின் கருத்து தொடர்பான கேள்விகளை தவிர்க்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கோடை காலத்தில் கூடுதல் மின்சாரம் தேவை குறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம். கோடை காலத்தில் 4200 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவை. ஏப்ரல், மே மாதங்களுக்கு தேவையான மின்சாரம் கணக்கீடு செய்து, டெண்டர் விடும் பணிகள் நிறைவு பெற உள்ளது. 2 கோடியே 67 இலட்சம் மின் நுகர்வோர்களில் 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளார்கள். இன்று இரவுக்குள் மீதமுள்ளவர்களும் இணைப்பார்கள் என நம்புகிறேன். அதனை இணைக்காதவர்களிடம் பதட்டத்தை உருவாக்க வேண்டாம். அதேசமயம் அப்பணி இன்றுடன் பணி நிறைவு பெறுகிறது. உறுதியாக கால நீட்டிப்பு கிடையாது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல முறை நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. அதேபோல ரயில்வேக்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதற்கு வரக்கூடிய காலம் நல்ல தீர்வை ஏற்படுத்தும். திமுக ஆட்சியில் காற்றாலை மின்சாரம் ஒரு யூனிட் கூட வீணடிக்கவில்லை. முழுமையாக பயன்படுத்தப்பட்டது. இந்தாண்டும் முழுமையாக காற்றாலை மின்சாரம் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.