முதலமைச்சரின் சுற்று பயணத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் இட்டுக்கட்டி பேசுகிறார்கள் - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
முதலமைச்சரின் சுற்று பயணத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் இட்டுகட்டி பேசுவதாக அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
விழுப்புரம்: தமிழகத்தில் படிக்கும் இளைஞர்கள், வேலை தேடுபவர்களுக்கு தமிழக முதல்வரின் சுற்றுப்பயணம் சிறப்பானதாக அமையும் என்றும் முதலமைச்சரின் சுற்று பயணத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் இட்டுகட்டி பேசுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மீன் மார்க்கெட்டில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் மீன்மார்க்கெட் வளாகத்தை இன்று (28.03.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் மீன்மார்க்கெட் அங்காடியினை பார்வையிட்டதுடன், பேருந்து நிலையம் அருகாமையில் உள்ளதாலும், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க எவ்வித இடையூறு இல்லாமல் மாற்று இடத்தில் பெரிய அளவில் மீன்மார்க்கெட் அங்காடி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேலை இங்கு பெரிய அளவு காய்கறி விற்பனை மையம் அமைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் மீன் வியாபாரிகள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம் ஒருங்கிணைந்து ஆலோசித்து நல்ல முடிவை எட்டிய பின்பு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திட்டமிட்டபடி பொதுமக்களுக்கேற்ப பெரிய அளவு மீன்மார்க்கெட் அங்காடி அமைத்திடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அனிச்சம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் அங்காடியினை பார்வையிட்டதுடன் இப்பகுதியில் மீன் மார்க்கெட் செயல்படுவதற்கு தடை வேண்டி இப்பகுதி குடியிருப்பு பகுதி மக்கள் நீதிமன்றம் சென்றுள்ளதால் உரிய தீர்ப்பு வரப்பெற்றவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,
முதலமைச்சர் துபாய்க்கு சென்று, மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் தமிழத்திற்கு தேவையான தொழிற்சாலைகளை கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்தில் தையல் பயிற்சி மையம் அமைக்க உடன்பாடாகியுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் படிக்கும் இளைஞர்கள், வேலை தேடுபவர்களுக்கு தமிழக முதல்வரின் சுற்றுப்பயணம் சிறப்பானதாக அமையும் என்றும், முதலமைச்சரின் சுற்று பயணத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் தங்கள் இஷ்டத்திற்கு சொல்லிக் கொண்டுள்ளதாகவும், முதல்வர் அரசு செலவில் வெளிநாட்டிற்கு சென்றவில்லை தி.மு.க., செலவில் சென்றுள்ளதாக அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தமிழக முதல்வர் முன்னிலை என்பதை விட, தமிழ்நாடு முன்னிலைபெற வேண்டும் என்ற உணர்வோடு செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிக்காரர்கள் தமிழக முதல்வரை இட்டுக்கட்டி பேசுவாதக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்