Annamalai: 'பின்வாசல் வழியாக செல்வதும், ரயிலில் ஏறி வருவதும் தமிழக முதல்வருக்கு புதிது அல்ல’ - அண்ணாமலை விமர்சனம்
திருக்கடையூரில் பாஜக 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் மழையில் நனைந்ததால் மேடையில் இருந்து வெளியேறி கொட்டும் மழையில் நனைந்துகொண்டே அண்ணாமலை உரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். திறந்தவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுகூட்டத்தில் திடீரென்று மழை பெய்ய துவங்கியது. இதனால் பொதுக்கூட்டத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மழைக்கு ஒதுங்க இடம் இல்லாததால் தங்கள் இருக்கைகளை குடையாக்கி மழையில் நனையாமல் தங்களை பாதுகாத்தனர். மேலும் மேடைக்கு அடியில் ஓடிச்சென்றும், அங்கு நிறுத்தியிருந்த வேனில் ஏறி தஞ்சமடைந்தனர். லேசாக மழை பெய்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வந்த அண்ணாமலைக்கு பட்டாசு வெடி முழக்கத்துடனும் நாட்டுப்புற இசை கச்சேரியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மழைநின்ற நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச துவங்கிய சிறிது நேரத்தில் மீண்டும் மழை கொட்ட தொடங்கியது. பொதுமக்கள் நனைவதை பார்த்த அண்ணாமலை மேடையில் இருந்து வெளியேறி திறந்தவெளியில் மழையில் நனைந்தவாறு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். 1947இல் திருவாவடுதுறை ஆதீனம் அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கிய செங்கோலை, நேரு கைத்தடி என்ற பெயர் பதித்து அலகாபாத் அருங்காட்சியகத்தில் செங்கோல் வைக்கப்பட்டது. தற்போது புதிய பாராளுமன்றத்தில் அதே செங்கோலை திருவாசகம், கோளறு பதிகம், தேவாரங்கள் பாடப்பட்டு ஆதீனங்கள் கைகளால் பெற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் நிறுவி மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
டெல்டாகாரன் என்று கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை ஒரு மூட்டை நெல்லுக்கு கமிஷன் பெறப்படுகிறது. நெல்லுக்கும் கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு மட்டுமே வழங்குகிறது. திமுக அரசு வழங்கவில்லை. மீனவர்களுக்கு 2.5 லட்சம் வீடு கட்டி தருவதாக கூறிய தமிழக அரசு இதுவரை ஒரு வீடு கூட கட்டி தரவில்லை. 2009 -ஆம் ஆண்டு ஈழ தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர் தொடுத்த போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்றது காங்கிரஸ் கட்சி. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழத் தமிழருடன் தோளோடு தோள் நின்று, இன்று அவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நமது பிரதமர் நரேந்திர மோடி. ஈழம் நன்றாக இருந்தபோது ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது அந்த தொடர்பு மீண்டும் வளர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் எண்ணம்.
பாட்னாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக ஓடிச் சென்றவர் மு.க.ஸ்டாலின். பின்வாசல் வழியாக செல்வதும், ரயிலில் ஏறி வருவதும் அவருக்கு புதிது அல்ல. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை முதல் ஆளாகச் சென்று சந்தித்தது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை வழங்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சாதாரண மக்கள் சம்பாதிப்பதே தனது குடும்பத்தாரிடம் தருவார்கள். ஆனால், செந்தில் பாலாஜி தான் சம்பாதிப்பதை மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தருவார். இதுதான் சாதாரண மக்களுக்கும் செந்தில் பாலாஜிக்கும் உள்ள வித்தியாசம். நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோல கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய திமுக ஆட்சியை அகற்றுவதும் முக்கியமான கடமை” என்றார். இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.