ஆட்டோவில் செல்ல அச்சமா? பாஜக பிரேமா பேச்சு - கொதித்தெழுந்த ஆட்டோ ஓட்டுநர்கள்!
மயிலாடுதுறையில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பாஜகவின் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் விவசாயப் பிரிவு மாநில துணைச் செயலாளர் பண்ணை வயல் இளங்கோ தலைமை தாங்கினார். இதில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மோதலுக்கு காரணமான பேச்சு
ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட துணைச் செயலாளர் பிரேமா கண்டன உரையாற்றினார். அப்போது அவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குறிப்பிட்டதோடு, "இன்றைய சூழலில் தமிழகத்தில் பெண்கள் தனியாக ஆட்டோவில் ஏறிச் செல்வதற்கு கூட பயப்படும் அளவுக்கு அச்சமான சூழ்நிலை நிலவுகிறது" என்று பேசினார்.
அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே, அங்கு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த சில ஓட்டுநர்கள் திடீரென ஆர்ப்பாட்ட களத்திற்குள் புகுந்தனர். "உழைக்கும் வர்க்கமான ஆட்டோ ஓட்டுநர்களை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தும் வகையில் எப்படி பேசலாம்?" என்று கேட்டு அவர்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு
ஆட்டோ ஓட்டுநர்களின் திடீர் குறுக்கீட்டால் அதிர்ச்சியடைந்த கூட்டணி கட்சியினர், அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமாக மாறியது. ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த தொண்டர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டதால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேடைக்கு அருகிலேயே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டதால், அங்கிருந்த பொதுமக்களும் வழிப்போக்கர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
காவல்துறை நடவடிக்கை
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து, இரு தரப்பினரையும் விளக்கி வைத்தனர். ஆட்டோ ஓட்டுநர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அரசியல் உள்நோக்கம்?
இந்தச் சம்பவம் குறித்து பேசிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள், "எங்கள் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில், திமுகவினரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இங்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். கருத்து சுதந்திரத்தை நசுக்க நினைக்கும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று குற்றம் சாட்டினர்.
இந்த மோதல் சம்பவம் காரணமாக மயிலாடுதுறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
























