Maharashtra Politcal Crisis: மகாராஷ்டிரா: சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் - அடுத்து என்ன?
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார்
தகுதி நீக்க நோட்டீஸ்:
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு, துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டுள்ள 16 எம்எல்ஏ-க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 16 ஏம்.எல்.ஏக்களுக்கும் ஜீன் 27-க்குள் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் முகாம்:
40க்கும் மேற்பட்ட எம் எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாமில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 20 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக சிவசேனா கூட்டணியினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 16 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
#MaharashtraPolitcalCrisis | Deputy Speaker of Maharashtra Assembly issues disqualification notice to 16 rebel Shiv Sena MLAs of Eknath Shinde camp currently staying in Guwahati, Assam
— ANI (@ANI) June 25, 2022
கட்சி குழுவில் தீர்மானம்:
அதிருப்தியாளர்கள் கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது எனவும் சிவசேனாவின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிவசேனா ஆட்சி அமைத்த விதம்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில் 106 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவைகள் 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 144 இடங்கள் தேவைப்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 152 சீட்டுகளுடன் ஆட்சி அமைத்தன.
பெரும்பான்மை:
ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழந்த நிலையில், தற்போது 144 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பதற்கு தேவை. சிவசேனா கட்சியிலிருந்து 21 உறுப்பினர்கள் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது 34 பேர் உள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 131 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை.
அடுத்த என்ன:
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் அடுத்து என்ன நிகழும் என எதிர்பார்ப்பு நிகழ்ந்துள்ளது.சிவசேனா கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும். பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் பாஜக கூட்டணி கட்சியினர், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். அந்த தருணத்தில் 3ல் 2 பங்கு சிவசேனா எம்.எல்.ஏக்கள் பாஜக-விற்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு அமையும். அதே தருணத்தில் கட்சி தாவல் சட்டத்தின்படி தகுதி நீக்கமும் செய்ய முடியாது. ஆனால் தற்போதே துணை சபாநாயகரால் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால், அவர்களால் எந்த கட்சிக்கும் வாக்களிக்க முடியாது. ஆனால் மகாராஷ்டிரா அரசியலில் என்ன நிகழும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..