அக்காவின் கணவர் சொந்தக்காரரா இல்லையா? - அண்ணாமலைக்கு ஜோதிமணி கேள்வி
திண்டுக்கல்லில் அண்ணாமலையின் அக்கா கணவருக்கு நெருக்கமானவர் வீட்டில் அமலாக்கத்துறை முதன் முறையாக சோதனை நடத்தி 13 கோடி ரூபாயை கைப்பற்றி, 250 கோடி மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.
ஜோதிமணி, செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் எனக்கு சொந்தம் எனக் கூறும் அண்ணாமலைக்கு, அவரது அக்காவின் கணவர் சொந்தக்காரரா இல்லையா? என கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கரூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். குறிப்பாக கரூர் அடுத்த கோடங்கிபட்டி பகுதியில் நன்றி தெரிவிக்க வந்த ஜோதிமணிக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஒரு சில பெண்கள் கோடங்கிபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைய வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேறவில்லை என கேள்வி எழுப்பினர். அப்போது தொடச்சியாக ஜோதிமணியை பேசவிடாமல் கேள்வி எழுப்பிய பெண்மணியை, எதிர்க்கட்சிகள் தூண்டுதல் பெயரில் அந்த பெண்மணி கேள்வி எழுப்புவதாக ஜோதிமணி பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பெண்களை காங்கிரஸ் கட்சியினர் சமாதானம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய ஜோதிமணி, கடந்த முறை பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருந்த போது விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து 13 இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்களை கொண்டு வந்ததாகவும், இன்னும் ஒரு மாதத்தில் கோடங்கிபட்டி பகுதியில் மேம்பாலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி - திண்டுக்கல்லில் அண்ணாமலையின் அக்கா கணவருக்கு நெருக்கமானவர் வீட்டில் அமலாக்கத்துறை முதன் முறையாக சோதனை நடத்தி 13 கோடி ரூபாயை கைப்பற்றி, 250 கோடி மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது. அது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினால் ஜோதிமணி, செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் எனக்கு சொந்தம் என்கிறார். அண்ணாமலைக்கு அவரது அக்காவின் கணவர் சிவகுமார் சொந்தக்காரரா இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், அமலாக்கத்துறை வழி தவறி அங்கே போயிருக்கலாம். அந்த வழக்கு எப்படி நடைபெறுகிறது என்பதை பொறுத்துதான் அது குறித்து பேச முடியும். நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது என்றார்.