பதிவுத்துறை அலுவலகத்தில் மோடி படம் இல்லாத்தால் பாஜகவினர் கொந்தளிப்பு - இந்திரா, ராஜிவ், ராகுல்காந்தி படங்கள் அகற்றம்
’’ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி, ராகுல் காந்தி புகைப்படத்தை எப்படி வைத்தீர்கள்?, எனவும் பாரதப் பிரதமர் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என்று கூறி பாஜகவினர் போராட்டம்’’
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இக்கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விருத்தாசலம் பதிவுத்துறை அலுவலக அலுவலகத்தில் விருத்தாசலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம் .ஆர் .ராதா கிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த விழாவில் திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இதர அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். அப்போது, சுவற்றில் அம்பேத்கர், காந்தி, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், ராஜீவ்காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகிய தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் விழாவிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட துணைத் தலைவரும், 16வது வார்டு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருமான செந்தில்குமார் அங்கிருந்த பதிவுத்துறை அதிகாரிகளிடம் ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி, ராகுல் காந்தி புகைப்படத்தை எப்படி வைத்தீர்கள்?, எனவும் பாரதப் பிரதமர் மோடியின் படத்தை ஏன் வைக்கவில்லை என்று கூறி முறையிட்டு உள்ளார் .அப்போது, அங்கிருந்த திமுகவினருக்கு செந்தில்குமார் மற்றும் அவருடன் வந்திருந்த பாஜகவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பிறகு, திமுகவினர் மோடியின் படத்தை வைக்க முடியாது என்று கூக்குரல் எழுப்பினர். இதனை அடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். அதன் பிறகு. அலுவலகத்திற்குள் இருந்த ராஜீவ் காந்தி மற்றும் ராகுல் காந்தி, இந்திரா காந்தியின் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சியினர் வெளியே எடுத்துச் சென்றனர்.
அதன் பிறகு, அங்கு வந்த விருத்தாசலம் காவல் துறையினர் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் செந்தில்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, சிறிது நேரம் கழித்து பாரத பிரதமர் மோடியின் படம் சுவற்றில் மாற்றப்பட்டது. பின்னர் பாரத பிரதமர் மோடி அவர்களின் படத்தினை மாற்றிட உதவிய நபர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.