மண்ணையும், மொழியையும் காக்க என்றும் களத்தில் நிற்போம் : கமல்ஹாசன்
மண்ணையும், மொழியையும் மற்றும் மக்களையும் காப்பதற்கு என்றும் களத்தில் நிற்போம் என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதிமய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தின் 16வது சட்டமன்ற தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கொரோனா தொற்று போன்ற இக்கட்டான சூழலிலும், 72 சதவீத வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. அரசியலாளர்களின் பொறுப்பை கூட்டுகிறது. தமிழக மக்களுக்கு என் பாராட்டுக்கள்.
100 சதவீத பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம். இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்ப இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கைவாதியாக என் ஆசை. இத்தேர்தலில் என்னோடு களம் கண்ட மக்கள் நீதிமய்ய உறுப்பினர்கள், தோழமைக்கட்சிகள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட சகலருக்கும் எனது நன்றிகள்.
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொறுத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். தமிழகத்தைச் சீரமைப்போம் என்பது வெறும் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனவு. அதை நோக்கிய பாதையிலும், பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களை காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.