'புதுச்சேரியில் உலக தரத்தில் கல்வி' வெளிநாட்டு அமைப்புடன் ஒப்பந்தம் போட்ட JCM மக்கள் மன்றம்..!
’புதுச்சேரியில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்களோ சீனியர்களாகவும், சூப்பர் சீனியர்களாகவுமே உள்ளனர். இளைஞர்களை கவரும் இளம் அரசியல் தலைவராக ஜோஸ் சார்லஸ் முயற்சிக்கிறார்’

புதுச்சேரியில் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு உலக தரத்தில் கல்வி வழங்குவதற்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள JCM மக்கள் மன்றம் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புகளுடன் இன்று வரலாற்று சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
JCM மக்கள் மன்றத்தின் மக்கள் பணி
சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள JCM மக்கள் மன்றம் புதுச்சேரியில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பு, புதுச்சேரி மாணவர்களுக்கு உலக தரத்தில் கல்வி வழங்கும் நோக்கில் அமெரிக்க மனித உரிமை அமைப்புடன் இன்று வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இதன் மூலம், புதுச்சேரியை பன்னாட்டு அரங்கில் தரம் உயர்த்தி அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் கனவு நனவாகவுள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மக்கள் மன்றத்தை ஜோஸ் சார்லஸ் தொடங்கியுள்ளதற்கு காரணம், இதன் மூலம் புதுச்சேரியில் இளைஞர் சக்தியை வைத்து புதிய புரட்சியை உருவாக்க முடியும் என அவர் நம்புவதாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - சார்லஸ்க்கு புகழாராம்
இன்று புதுச்சேரி வந்த ஐக்கிய மனித உரிமை அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச இளைஞர் அமைப்பின் தலைவர் Dr. மேரி ஷட்டில்வொர்த் முன்னிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பு மிக்கதாக ஆக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அப்போது பேசிய மேரி, , "He is a Visionary and a true leader" என ஜோஸ் சார்லஸ்க்கு புகழாராம் சூட்டியுள்ளார்.
சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தில் பங்கேற்று தமிழில் ஜோஸ் சார்லஸ் பேசிய நிலையில், அந்த உரை அங்கிருந்த பலரையும் கவர்ந்ததாகவும், தமிழர்களின் கலாச்சாரம், தொன்மை மற்றும் திருக்குறளின் மேன்மை பற்றி அவர் உரையாற்றியதை பலரும் பாராட்டி வரும் சூழலில், இப்போது புதிய முன்னெடுப்பை அவரது மக்கள் மன்றம் செய்துள்ளது.
அரசியல் மாற்றத்தை நோக்கிய நகர்வு
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனாக ஜோஸ் சார்லஸ் புதுச்சேரி அரசியலில் கால் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுபோன்ற கல்வி மற்றும் சமூக முன்னெடுப்புகள் மூலம் புதுச்சேரி இளைஞர்களை அவர் கவர்ந்து வருகிறார். புதுச்சேரியை பொறுத்தவரை அதிக அளவில் இளம் வாக்காளர்கள் உள்ள நிலையில், தலைவர்கள் மட்டும் சீனியர்களாகவும் , சூப்பர் சீனியர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டை போல இளைஞர்களை கவரும் இளம் அரசியல் தலைவர் புதுச்சேரி அரசியலில் பெரிதாக யாரும் இல்லை. அப்படியான சூழலில், அந்த இடத்தை இட்டு நிரப்ப ஜோஸ் சார்லஸ் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.





















