Jayalalithaa: ’தைரியம் குறையாத தலைவி’ : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று
Jayalalithaa: கட்சியை திறம்பட கையாண்டது மட்டும் இல்லாமல் ஜெயலலிதா மட்டும் தமிழ்நாட்டில் அதிக முறை மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர்.
தனது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் “ வெற்றிடம் உருவாகியுள்ளது” என்ற பேச்சினை உருவாக்கியவர் என்றால் அது மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தனது தொண்டர்களைக் கடந்து பொதுமக்களாலும் “அம்மா” என அழைக்கப்பட்ட ஜெயலலிதா தான். அதிமுக என்ற கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளாராக அரசியல் பயணத்தினை தொடங்கிய ஜெ தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தமிழ்நாடு மக்களுக்காக அர்ப்பணிக்கப்படும் என்பதை யோசித்திருப்பாரா என்றால் தெரியவில்லை. ஆனால் இவரது அரசியல் வாழ்க்கைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவின்போது அவரது பிரேத உடலிடமே ஜெ.,வை அன்றைய எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அனுமதிக்கவில்லை. எம்.ஜி.ஆர் உடல் நல்லடக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்ட போது ஜெ.,வை அன்றை அதிமுக மூத்த தலைகள் கீழே தள்ளிவிட்டனர். அதன் பின்னர் அதிமுக இரண்டு குழுக்களாக பிரிந்தது. அதிரடி அரசியல் மாற்றங்களுக்குப் பின்னர் அதிமுக ஜெயலலிதா வசம் வந்த ஆண்டு 1989. ஆனால் அதன் பின்னர் அதிமுக 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை கட்சி அவர் வசம்தான் இருந்தது. இரண்டு முறை சிறை சென்று திரும்பிய பின்னரும் கட்சி ஜெ., வசமே இருந்தது.
கட்சியை திறம்பட கையாண்டது மட்டும் இல்லாமல் ஜெயலலிதா மட்டும் தமிழ்நாட்டில் அதிக முறை மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (டிசம்பர் 5 2016) முதலமைச்சர் என மொத்தம் 5 முறை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர்.
ஜெயலலிதாவுக்கு அரசியல் குரு என்றால் அது எம்.ஜி.ஆர் தான். மக்களை நீ பார்த்துக் கொண்டால் மக்கள் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற கொள்கையை ஏற்று அரசியல் பயணத்தை தொடங்கியவர். ஜெயலலிதா 1991 ஜூலை 24ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறையாகப் பொறுப்பேற்றார். அவரது ஆட்சிக் காலத்தில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட பல சிறப்பு திட்டங்களின் தாக்கம் இன்று வரை தமிழ்நாட்டில் எதிரொலித்துக் கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பெண்களின் கல்வியை ஊக்கப்படுத்தினார். இதுமட்டும் இல்லாமல் பட்டதாரி பெண்களுக்கு திருமணத்தின் போது தாலிக்கு தங்கமும் ரொக்கமும் வழங்கினார். இலவச மடிக்கணினித் திட்டம், ரூ 10க்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில், அம்மா உணவகம் என இவரது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளமாக இருக்கின்றது.
ஜெயலலிதாவின் சொந்த எதிரிகளோ அரசியல் எதிரிகளோ அனைவரும் அவரிடம் பார்த்து பிரம்மிப்படையும் விஷயம் என்றால் அவரது தைரியமும் அசாத்திய துணிச்சலும்தான். அரசியல் சூழ்ச்சிகளால் தான் வீழ்த்தப்பட்ட காலத்தில் இருந்து மீண்டு வந்து அனைவருக்கும் பதிலடி கொடுத்தவர் ஜெயலலிதா. தைரியமாக, மிடுக்காக, துணிச்சலாக வாழ்ந்து வந்த ஜெயலலிதாவின் இறுதிக்கட்டம் என்பது யாரும் எதிர்பாரதது. அவரது மறைவு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி அவரது தொண்டர்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் அன்றைய காலகட்டத்தில் அனைத்து ஊடகங்களாலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடல் சவக்குழிக்குள் இறக்கப்பட்டபோது “மக்களால் நான் மக்களுக்காகவே நான், செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா” என தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா முழங்கியதை ஒலிபரப்பினார்கள் அந்த காட்சியைப் பார்த்து கண்ணீர் விடாதவர்களே இல்லை எனலாம். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகின்றது.