''இப்போது மைக்ரோ அளவில்கூட கொரோனா பணிகள் நடைபெறவில்லை'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
காயிதே மில்லத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா மற்றும் வளர்மதி ஆகியோர் மலர்போர்வை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினர். பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
" கழக ஒருங்கிணைப்பாளருக்கும்,இணை ஒருங்கிணைப்பாளருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.கட்சியைப் பொருத்தவரை எழுச்சியோடு சென்று கொண்டுள்ளது. நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது கொரோனாவின் தாக்கம், எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதுபோல கிட்டதட்ட 6 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் என அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இன்று என்ன நிலைமை? 25 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உள்ளது.இறப்புகள் அதிகமாக உள்ளது. மரணங்களின் எண்ணிக்கை கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. எங்கள் ஆட்சிக் காலத்தில் கோவையில் 1வருடத்தில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 400 ஆக இருந்தது.
ஆனால் இவர்கள் ஆட்சி காலத்தில் கிட்டதட்ட 1 மாதத்தில் 745 பேருக்கு மேல் இறக்கிறார்கள். மரணங்களின் சதவீதம் அதிகமாக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். .கொரோனாவை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தியைப் பார்த்தேன். அதிகாரிகள் குழு போடுவதால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சரியாகச் செயல்படவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
ஆட்சியை விட அதிகாரிகளை தி.மு.க. நம்புகிறது என்றுதான் சொல்ல முடியும். எப்போதும் மக்களுக்கு சேவை செய்யும் கழகம் எங்கள் கழகம். அந்த வகையில், எங்கள் கடமைகளை நாங்கள் சரியாகச் செய்து வருகிறோம். தி.மு.க. போல 10 பேருக்கு அளித்துவிட்டு விளம்பரம் தேடும் கட்சி நாங்கள் கிடையாது.
உணர்வு பூர்வமாக மக்களுக்கு உதவும் இயக்கம் எங்கள் இயக்கம். சரியான திட்டமிடலோடு நடவடிக்கை எடுத்து கொரோனா தாக்கத்தை குறைத்தது எங்கள் அரசு. அன்றைக்கு அடிக்கடி முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டங்கள் போடப்பட்டு பல்வேறு குழுக்கள் போடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று உள்ளதாக என்று கண்டறியும் பணி தற்போது நடைபெறுகிறதா? இல்லை. பரிசோதனையின் முடிவுகள் வருவதற்கு 4 அல்லது 5 நாட்கள் ஆகிவிடுகிறது. எங்கள் ஆட்சியில் முன்களப் பணியாளர்கள் வீடு,வீடாக சென்று ஆய்வு நடத்தி யாருக்காவது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தோம். அதனால் கொரோனா தாக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தினோம்.
ஆனால், தற்போது மைக்ரோ அளவில்கூட பணிகள் நடைபெறவில்லை. இதனால், அதன் தாக்கம் அதிகரித்து கொரோனா பரவிவருகிறது .முழு ஊரடங்கு போட்டார்கள். முழு ஊரடங்கு போலதான் இருந்ததா? முதலமைச்சர் பேச்சை மக்களும் கேட்பதில்லை. அதிகாரிகளும் கேட்பதில்லை. அதன் விளைவுதான் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது."இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க : 'ஆபரேஷன் Whip' ஓபிஎஸ்-ன் அடுத்த மூவ்...!