‘கீ கொடுக்கும் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் செயல்படுகிறார்” - கோகுல இந்திரா
மக்கள் நல திட்டங்களினால் மட்டுமே அதிமுக அரசு கடந்த 10 ஆண்டு காலத்தில் ஆட்சி அமைத்துள்ளது - முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா
அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைந்து 51 ஆம் ஆண்டு விழா திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுகவின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பாக நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் முன்னாள் அமைச்சர், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “அதிமுக ஆரம்பித்து இன்று வரை முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகன் ஸ்டாலின் ஆகியோர்கள் அதிமுகவின் பெயரில் பல்வேறு பொய் வழக்குகளை தொடர்ந்து வரும் நிலையில் ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதியால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியவில்லை.
தமிழகத்தில் எந்த ஆட்சியிலும் கொண்டுவர முடியாத வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தது அதிமுக அரசு. கடந்த அதிமுக அரசினால் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம், மற்றும் 6 மாவட்டங்களை பிரித்து தனி மாவட்டங்களாக அறிவித்தது அதிமுக அரசு. குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், சிலிண்டருக்கு 100 ரூபாய், கல்வி கடன் ரத்து, திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப்படும் என்று சொன்னார்கள். அதை இன்று வரை நிறைவேற்றினார்களா?. திருவண்ணாமலை நகரை மாநகராட்சியாக மாற்றுவோம். மாட வீதிகளை சிமெண்ட் சாலையாக அமைப்போம் என்று சொன்னதை இன்று வரை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த திமுக அரசு செயல்படுத்தவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலையில் உள்ள 39 வார்டுகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உட்பட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் ஆளும் திமுக அரசு செய்த தரவில்லை. பல கோடி ரூபாய் அளவில் திருவண்ணாமலை நகரில் அடிப்படை வசதிகளையும் செய்து தருவோம் என்று சொன்ன திமுக அரசு இன்று வரை செய்து தரவில்லை. விஞ்ஞான ரீதியாக திமுக அரசு ஏமாற்றி வருவது போல் மாவட்டத்தின் அமைச்சர் எ.வ. வேலு மக்களை ஏமாற்றி வருவகிறார். கருணாநிதி ஆட்சியில் உள்ள போது ஏற்பட்ட குண்டுவெடிப்புகளை போல தற்போதைய ஸ்டாலின் ஆட்சியிலும் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருகிறது” என்று பேசினார்.
இதன்பின்பு பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, “ஆளுங்கட்சியாக வந்த திமுக அரசு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அடிமட்ட திமுக தொண்டர்கள் வரை அவர்களை கட்டுப்படுத்த திராணி அற்ற அரசாக திமுக அரசு செயல்படுகிறது. கீ கொடுக்கும் பொம்மை முதலமைச்சராகவும், போட்டோ சூட் நடத்தும் முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கூட்டணி தேவையில்லை. அதிமுக அரசு தனித்து நின்று ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு அதிமுக உள்ளது என்றால் அது அத்தனையும் மக்கள் திட்டங்களால் மட்டுமே. அதிமுக அரசு கூட்டணி இன்றி வெற்றி பெற்றுள்ளது” என்று கூறினார்.