Karnataka Election: கர்நாடக தேர்தலில் 3 தொகுதிகளில் தனித்து போட்டி...ஸ்கெட்ச் போட்ட ஓ.பி.எஸ்..!
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
வரும் மே மாதம் 10ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
கர்நாடக அரசியல் சூழல்:
கர்நாடகாவை பொறுத்தவரையில் மூன்று முக்கிய கட்சிகள் உள்ளன. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பழைய மைசூரு பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம். பொதுவாக, இந்த மூன்று அரசியல் கட்சிகளை சுற்றிதான் அரசியல் நகர்வு மேற்கொள்ளப்படும்.
ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியும் கர்நாடக தேர்தலில் பொதுவாக அதிக கவனம் செலுத்துவது வழக்கம். தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் என்பதால் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதன் காரணமாகவே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிமுக பல ஆண்டுகளாக போட்டியிட்டு வருகிறது.
கர்நாடகாவை குறிவைக்கும் அதிமுக:
அந்த வகையில், இந்த முறையும், கர்நாடக தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது அதிமுக. அதற்காக, 10 தொகுதிகளை அடையாளம் அங்கு போட்டியிட அதிமுக திட்டமிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதால், கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் இணைந்து அதிமுக போட்டியிடுமா என கேள்வி எழுந்தது.
அதற்கு ஏற்றார் போல், தங்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிமுக சார்பில் பாஜகவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜாஜிநகர், காந்திநகர், காமராஜப்பேட்டை, புலிகேசிநகர், சிவாஜிநகர் மற்றும் சி.வி. ராமன் நகர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு என கணிசமான வாக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் இந்த வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் என கருதப்படுகிறது. கடந்த 1983ஆம் ஆண்டு முதல், கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) சட்டப்பேரவை தொகுதியில் (பட்டியலிட் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது) மூன்று முறையும் (1983, 1989 மற்றும் 1999) மற்றும் காந்திநகர் தொகுதியில் (1994) ஒரு முறையும் அதிமுக வெற்றி பெற்றது.
ஸ்கெட்ச் போட்ட ஓ.பி.எஸ்:
இந்த நான்கு முறையும் அதிமுக தனித்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ஆம் ஆண்டு, கேஜிஎஃப் தவிர ஹனூர் மற்றும் காந்திநகர் ஆகிய மூன்று இடங்களில் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியது. 1999ஆம் ஆண்டு, சிக்கமகளூரு, ஷிவமொக்கா, பத்ராவதி உள்ளிட்ட 13 தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்த நிலையில், கர்நாடகவில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டியிட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோலார் தங்கவயல், காந்திநகர் மற்றும் பங்கரூபேட் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.