ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வலுப்படுத்தவே அக்னிபத் திட்டம் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வலுபப்டுத்தவே அக்னி பாத் திட்டம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வலுப்படுத்தவே அக்னிபத் திட்டம் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- முதலமைச்சர் ரங்கசாமி எதிர்கட்சி தலைவராக இருந்த போது, காங்கிரஸ் ஆட்சியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். ஆளுநர் கிரண்பேடியின் குறுக்கீடு, மத்திய அரசின் தொல்லை ஆகியவற்றின் காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. தற்போது பா.ஜனதா வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்துள்ள ரங்கசாமி, ஏன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை?. பா.ஜ.க.வுக்கும், என்.ஆர்.காங்கிரசுக்கும் விரிசல் உள்ளதா? மத்திய அரசு பட்ஜெட்டை திருப்பி அனுப்புகிறதா? புதுவை பா.ஜனதாவினர் முழு பட்ஜெட் போடுவதை தடுக்கிறார்களா? காங்கிரசை குறை சொன்ன ரங்கசாமி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்? இதுகுறித்து புதுவை மக்களுக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
நிதி பற்றாக்குறையால் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாத நிலை நிலவுகிறது. தொழில்நுட்ப பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர். எங்கள் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைத்தான் இந்த அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. புதிதாக என்.ஆர்.காங்கிரஸ் அரசில் ஒரு திட்டம்கூட கொண்டு வரப்படவில்லை. இதை முதலமைச்சருக்கு சவால்விட்டு நான் கூறுகிறேன். பல இடர்பாடுகளையும், நெருக்கடிகளையும் தாண்டி நாங்கள் திட்டங்களை கொண்டு வந்தோம். நடுத்தர குடும்பங்கள் தற்போது மின் கட்டண உயர்வால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாதம் ரூ.2 ஆயிரம் மின் கட்டணம் செலுத்திய குடும்பங்கள் தற்போது கூடுதலாக ரூ.600 செலுத்த வேண்டியுள்ளது. தனியார்மயமானால் இது மேலும் அதிகரிக்கும். தனியார்மயத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல தயாராகி வருகிறோம். கடந்த காலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பார்த்து இங்கு குடியேறினர். தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. புதுவையில் ரேஷன்கார்டை ரத்து செய்துவிட்டு தென்மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. கடந்தகால ஆட்சியின்போது ஆண்டுக்கு இலவச அரிசி வழங்க ரூ.294 கோடி நிதி ஒதுக்கினோம்.
புதிய அரசு ஓராண்டாகியும் இதுவரை ரேஷன்கடையும் திறக்கவில்லை, இலவச அரிசியும் வழங்கவில்லை. மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ராணுவ வீரர்களில் 75 சதவீதம் பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாக்பூரில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தடிகளை கொண்டு பயிற்சி அளிப்பார்கள். தற்போது ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நுழைக்க திட்டமிட்டு இந்த சதி செய்துள்ளனர். தடிகளை பயன்படுத்தி பயிற்சி எடுத்தவர்கள் துப்பாக்கியில் பயிற்சி எடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர். எனவே அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வேண்டும். வடமாநிலங்களில் பரவிய கலவரம் தென் மாநிலங்களில் பரவும் நிலை உருவாகும். இதை கட்டுப்படுத்த முடியாது என நாராயணசாமி கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்