‘முக்குலத்தோர் வாக்குகளை பெற எடப்பாடி புது வியூகம்’ தேர்தல் அறிக்கையில் வருகிறது முக்கியத்துவம்..!
’வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கியதுபோல, முக்குலத்தோர் சமூகத்திற்கும் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது’

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் கைக்கோர்த்து வந்தது யாரும் எதிர்பாராதது. ஆனால், இதனை தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்தார் எடப்பாடி பழனிசாமி. இது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்படுவதுதான். மூன்று பேரும் சேர்ந்தால் அது வேஸ்டுதான் என்று அதிரடியாக பேசினார். அதோடு, செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை, அவரின் உள்ளடி வேலையால்தான் 2021ல் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்றும் போட்டுடைத்திருக்கிறார்.
‘தேவர் இன விரோதி பிம்பத்தை உடைத்த எடப்பாடி’
டெல்டா, தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வரவிடாமல் தடுக்க, டிடிவி தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோர் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை தேவர் இன விரோதி என்ற வகையில் சித்தரிக்க முயன்ற நிலையில், பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் இபிஎஸ். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தனது பிரச்சாரத்தில் அதிரடியாக கோரிக்கை வைத்தார். இதனையறிந்த டிடிவி தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துப்போயினர். எடப்பாடியை சுற்றி பின்னப்படும் தேவர் இன விரோதி என்ற சிலந்தி பின்னலை ஒரே ஒரு கோரிக்கையால் அவர் அறுத்தெறிந்துவிட்டார் என அவர்கள் இருவரும் அதிர்ந்துப்போயினர். நமது கையிலிருக்கும் ஆயுதத்தை எடுத்து நமது கையிலேயே கிறலை போட்டுவிட்டாரே எடப்பாடி என்று அவர்கள் குழம்பிக் கிடந்த நேரத்தில்தான். தேவர் ஜெயந்தி விழாவை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கலாம் என்ற திட்டத்தை தீட்டினர். அதனால்தான் அந்த தினத்தில் செங்கோட்டையனை தங்களுடன் கைக்கோர்க்க வைத்தனர். ஆனால், அந்த திட்டமும் பெரிதாக எடுபடவில்லை.
தேசியமும் தெய்வீகமும் தனது
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 30, 2025
இரு கண்களாகப் போற்றி வணங்கி,
தேச விடுதலைக்காக பெரும் படையைத் திரட்டிய தென்னாட்டுச் சிங்கம்,
வீரம், விவேகம், உண்மை, உறுதி ஆகியவற்றைத் தன் கொள்கையாகக் கொண்டு பொதுவாழ்வில் மிளிர்ந்த அரசியல் பேராளுமை,
ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற
தனது வாழ்நாளை… pic.twitter.com/sjKEC6J3hy
பசும்பொன்னில் எடப்பாடிக்கு அதிகரித்த ஆதரவு
ஆனால், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்றபோது அவருக்கான ஆதரவு அதிகரித்திருந்தது. கடந்த 2023ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிலர் முழங்கமிட்டனர். இந்த முறை அது கூட இல்லை. அதற்கு காரணம். அதிமுகவில் முக்குலத்தோர்க்கு அவர் மீண்டும் அங்கீகாரம் கொடுத்ததுதான். குறிப்பாக, கட்சியில் துணைப் பொதுச்செயலாலராக நந்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், சட்டமன்ற துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் என அவர் முக்குலத்தோர் நிர்வாகிகளுக்கு முக்கிய பதவிகளை கொடுத்து வைத்துள்ளார் எடப்பாடி.
அதோடு, தன்னுடைய பிரச்சார பயணத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்துப்போகாமல், அதனை கோரிக்கை மனுவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைவிடம் கொடுத்ததை முக்குலத்தோர் சமூக மக்கள் வெகுவாக ரசித்தனர். இதன்மூலம் அவர் மேல் கட்டமைக்கப்பட்ட அதிருப்தி இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறது. மேலும், பல ஆண்டு கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்பதையும் மத்திய பாஜக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
தேவர் திருமகனாருக்கு, நாட்டின் உயரிய #பாரத_ரத்னா விருது வழங்க வேண்டும் என நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ள @AIADMKOfficial.
— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) October 30, 2025
-பசும்பொன்னில் தெய்வத் திருமகனார் திருக்கோயிலில் மரியாதை செலுத்திய பின் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்… pic.twitter.com/8b9mM6vzdO
டிடிவி தினகரன் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி
இந்நிலையில், தென் மாவட்டங்களில் ஒற்றுமையை குலைக்கும் வகையில் எடப்பாடி வெற்று வாக்குறுதியை தந்திருக்கிறார் என்று டிடிவி தினகரன் பேசினார். இதனை அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தினரே ரசிக்கவில்லை. அதே நேரத்தில், தேவர் ஜெயந்தி அன்று அவருக்கு மரியாதை செய்வதைவிடுத்து, அதில் அரசியல் லாபம் அடையலாம் என்று டிடிவி தினகரன், ஒபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தியதும் அம்மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
தேர்தல் அறிக்கையில் முக்குலத்தோர்க்கு முக்கியத்துவம் - EPS திட்டம்
இப்படியான சூழலில், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்குலத்தோர் மக்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, தேவருக்கு பாரத ரத்னா, மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர், கள்ளர், மறவர், அகமுடையார் என்று மூன்று சாதியாக இருப்பவர்களை ‘தேவர்’ என்ற ஒரே குடைக்குள் கொண்டுவந்து சாதி சான்று வழங்குவது, வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியதுபோல, முக்குலத்தோர் சமூகத்தினருக்கும் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பில் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிடவிருப்பதாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்மூலம், 2026ல் முக்குலத்தோர் வாக்குகளை அதிமுக பக்கம் சிந்தாமல், சிதறாமல் பெற முடியும் என எடப்பாடி பழனிசாமி நம்புவதாக கூறப்படுகிறது.




















