ஒரே நாளில் 4 கொலைகள், 11 போக்சோ வழக்கு! குற்றவாளிகளுக்கு பயம் இல்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள், 11 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பதுதான் திமுக அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
4 கொலை, 11 போக்சோ:
மதுரை பெருங்குடி அருகே சிவகங்கையைச் சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
●கோவை மதுக்கரையில் ஒரு பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
●ஈரோடு நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த தம்பதியினர் கொடூரமான முறையில் வெட்டப்பட்டதில், கணவர் உயிரிழப்பு; மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
●சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோடாங்கி சந்தானம் என்ற குறி சொல்லும் நபர் அரிவாளால் வெட்டிக்கொலை.
அதுபோக, கடந்த 24 மணி நேரத்தில் 11 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் தினந்தோறும் தொடரும் கொலை சம்பவங்கள் !
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 20, 2025
தடுக்கத்தவறிய ஸ்டாலின் மாடல் அரசு !
அச்சத்தில் தமிழக மக்கள் !
-------------------------------
நேற்றைய தினம் (19.03.2025)
ஒரே நாளில் …
●மதுரை பெருங்குடி அருகே சிவகங்கையைச் சேர்ந்த காவலர் மலையரசன் எரிந்த நிலையில் சடலமாக… pic.twitter.com/txeAgcI0ra
கொடுமையான நிலை:
"சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் சொல்லிக்கொண்டு இருந்தபோது வந்த செய்திகள் இவை.
Daily Status Report கொடுப்பது போல, தினசரி கொலை அறிக்கை, தினசரி போக்சோ அறிக்கை எல்லாம் கொடுக்க வைத்துள்ளது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஆகப்பெரும் சாதனை. இதை விட கொடுமையாக சட்டம் ஒழுங்கின் நிலை தமிழ்நாட்டில் முன் எப்போதும் இருந்ததில்லை.
குற்றவாளிகள் பயப்படவில்லை:
சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. "குற்றம் நடந்தால் கைது செய்கிறோம்" என்றெல்லாம் சொல்லி பொறுப்பை தட்டிக்கழிப்பது அதிகார மமதையின் உச்சம் என்றே எண்ணவும் தோன்றுகிறது.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் காவல்துறை என ஒன்று இருப்பதாகவோ, அத்துறையின் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகள் அச்சப்படுவதாகவோ தெரியவில்லை; அதற்கு நாள்தோறும் பட்டப்பகலில் நடக்கும் கொலை சம்பவங்களே சாட்சி!
மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வீட்டிற்கு வந்தால் தான் உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலையில் தான் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

