மேலும் அறிய
ஆளுநர் ரவியை தமிழகத்தில் வைத்து அவரது திறமையை வீணடிக்காதீர்கள் - எம்எல்ஏ ஈஸ்வரன்
தமிழ்நாடு அரசை ஏதாவது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற, ஒன்றிய அரசின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஒன்றிய அரசு ஆளுநர் ரவியை தமிழகத்தில் வைத்து அவரது திறமையை வீணடிக்காமல், பாஜக மாநில ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பினால் அந்த மாநிலம் வளர்ச்சி வரும் என்று பாப்பிரெட்டிபட்டியில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேட்டியளித்தார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே எருமியாம்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அதில், “தமிழ்நாட்டின் பெயரையே மாற்றுவதற்கான முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டார். அதற்கான எதிர்ப்பு குரல் கிளம்பியுடன் அமைதியானார். தமிழ்நாட்டின் ஆளுநர் மெத்த படித்தவர், ஆளுமை திறன் கொண்டவர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதை பயன்படுத்தினால் மக்களுக்கு நல்லதாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் நல்லவர் என சான்றிதழ் கொடுக்கிறார். ஆனால் இங்கு அரசியலில் பேசி வருகிறார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரோடு இணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் நிலுவையில் இருந்து வருகிறது. இதனை ஆளுநர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் பேசி, கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அவ்வாறான ஆக்கப்பூர்வமான ஆளுநராக தான் அவரை பார்க்கிறோம். ஆனால் ஆளுநர் அரசியல் பேசுகிறார். இதனை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை ஆளுநர் ஏதோ பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசை ஏதாவது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற, ஒன்றிய அரசின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார். ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுக் கொண்டு பாஜக ஆளுகின்ற மாநிலங்களுக்கு ஆளுநராக பணியமர்த்த வேண்டும். ஏனென்றால் அவர் பாஜகவின் கொள்கையோடு ஒன்றிப்போய் இருக்கிறார்.
அங்கு இருக்கும் பொழுது அந்த மாநிலம் வளர்ச்சி பெறும். எனவே தமிழ்நாடு ஆளுநரை இங்கு வைத்துக்கொண்டு அவரது திறமையை வீணடிக்காமல், பாஜக ஆளுகின்ற மாநிலத்துக்கு சென்றால், அவரும் முழு ஒத்துழைப்போடு அந்த மாநில வளர்ச்சிக்காக மனப்பூர்வமாக பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. ஆளுநர் ரவி பல நேரங்களில் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறார். அதையெல்லாம் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனை ஒன்றிய அரசு ஆளுநரிடம் சொல்ல வேண்டும். நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் அங்கு சென்றுள்ளீர்கள் என ஆளுநருக்கு சொல்ல வேண்டும்.
ஆளுநர் மாளிகையின் பெயர் மாற்றம் செய்வது நடைபெறக்கூடிய காரியமில்லை. தினமும் ஏதாவது சொல்லி, அதனை பரபரப்பு ஏற்படுத்த வேண்டும். தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். இது ஒரு வாரத்திற்கு பேசப்படும் என்று அவருக்கு தெரியும். இதனால் நடக்காத காரியத்தைச் சொல்லி செய்திகளில் ஒரு பரபரப்பை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். ஆளுநர் என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. எனவே ஆளுநர் தமிழ்நாடு நிர்வாகத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. ஆளுநர் மாளிகை செலவு கணக்கு குறித்து நிதி அமைச்சர் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். ஆனால் அதற்குரிய விளக்கத்தினை தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்திருக்கலாம். அதனை விடுத்து பொத்தாம் பொதுவாக ஆளுநர் மாளிகை செலவு கணக்கு முழுவதும் பொய் என கூறுவது சரியல்ல. நிதியமைச்சர் தெளிவாக சொல்லிய பிறகு என்ன செலவானது என்பது குறித்து விளக்கமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை தவிர்த்து விட்டு மற்றதை பேசிக் கொண்டிருக்கிறார். அது குறித்து தெளிவுபடுத்தவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் சிறந்த மனிதர் என சொல்லிவிட்டு, மறுபுறம் அரசியல் ரீதியில் விமராசனம் செய்து வருகிறார். இவர் ஆளுநராக இல்லாமல் பாஜகவின் மாநில தலைவராக இருந்தால், இதைவிட அதிகமாக கூட பேசலாம். ஆனால் ஆளுநராக இருந்து கொண்டு அரசியல் விமர்சனம் செய்து வருவதை மக்கள் ஏற்கவில்லை” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion