kalaignar Karunanidhi's Press meet: திக்கு முக்காட வைத்த கலைஞரின் நச் பதில்கள்...!
’’110வது விதி என்பதற்கு பதிலாக 111 என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்’’
பிரிக்க முடியாதது; கலைஞரும், செய்தியாளர்கள் சந்திப்புகளும் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால தலைப்பு செய்தியாய் இருந்து மறைந்தவர் கலைஞர் கருணாநிதி. செய்தியாளர்கள் சந்திப்புகளிலும், செய்தியாளர்களை சந்திக்காத நாட்களில் கேள்வி-பதில் அறிக்கைகளாக வெளியான மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் ’நச்’ பதில்களின் தொகுப்பு இதோ...!
கேள்வி: ’’பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா ?’’
பதில்: ’’போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.’’
கேள்வி: ’’புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?’’
பதில்: ’’ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்’’.
கேள்வி: ’’ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று மத்திய அமைச்சர் அந்தோணி சொன்னாரா?’’
பதில்: ’’என்னிடம் சொன்னார்; ஆனால் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.’’
கேள்வி: ’’நீங்கள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்?’’
பதில்: ’’நல்ல ஜனாதிபதி வர வேண்டும் என விரும்புகிறேன்’...!’
கேள்வி: ”அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?’’
பதில் : ``ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே... அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!
கேள்வி: ’’திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என துக்ளக் சோ பேசி உள்ளாரே?’’
பதில்: மதுவகைகள் தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் வேறு எப்படி பேசுவார்?
கேள்வி: ’’மதிமுகவை உடைக்க சதி நடப்பதாக வைகோ பேசி உள்ளாரே?’’
பதில்: ஆமாம். உண்மைதான்; அந்த சதியை செய்ய அவர் ஒருவரே போதாதா?
கேள்வி: ’’முதல்வர் ஜெயலலிதா அன்றாடம் 110-வது விதியின்கீழ் பேரவையில் அறிக்கை படித்தவுடன் அமைச்சர்களும் அப்படியே பாராட்டு வழங்க ஆரம்பித்துள்ளார்களே ?’’
பதில்: மழை பொழிகிறதோ இல்லையோ; இந்தப் பாராட்டு மழைதான் சட்டப்பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் பெய்து கொண்டிருக்கிறது!
கேள்வி: ’’ஜெயலலிதா ஆட்சியில்தான் திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் பேசியிருக்கிறாரே?’’
பதில்: இந்தப் பேச்சுக்கு உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் நடித்த "விஸ்வரூபம்" - நடிகர் விஜய் நடித்த "தலைவா" படங்களைக் கூறலாம்!
கேள்வி: கடலாடியில் 1,500 கோடி ரூபாயில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப் படும் என்று 110 விதியில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?
பதில்: 110வது விதி என்பதற்கு பதிலாக 111 என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!
கேள்வி: சமஸ்கிருத வாரம் தமிழகத்திலே கொண்டாடுவதற்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தது பற்றி?
பதில்: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் குட்டிகளுக்கு தாரா, மீரா, பீமா, நர்மதா, அனு என்றும், திருவரங்கத்தில் "யாத்ரி நிவாஸ்" என்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியது தான் நினைவுக்கு வருகிறது.
கேள்வி: ’’தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடந்துகொண்ட போதிலும், இந்திய அரசு. அது எந்த அரசாக இருந்தாலும் இலங்கையை ஆதரித்து வருகிறார்களே?’’
பதில்: இலங்கைக்கு சீனா 1971-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அளித்துள்ள மொத்த உதவி 5.06 பில்லியன் டாலர் என்றால், 2005-ம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலக் கட்டத்தில் மட்டும் அதாவது ராஜபக்ஷே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், இந்த உதவியில் 94 சதவீதம் அளவுக்கு, அதாவது 4.76 பில்லியன் டாலர் சீனாவினால் இலங்கைக்குத் தரப்பட்டிருக்கிறது என்றால், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் உள்ளார்ந்த நட்பினை, நம்முடைய இந்தியா இன்னமும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனைதான் நமக்கு ஏற்படுகிறது. இலங்கையின் இப்படிப்பட்ட உள்நோக்கத்தையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தான் இந்திய அரசு இலங்கை அரசோயோடு உறவு கொண்டுள்ளது.
“கபாலி” திரைப்படத்திற்கு பத்து டிக்கெட்டுகள் அனுப்ப வேண்டுமென்று கடிதம் அனுப்பிய அமைச்சரின் உதவியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டாராமே?
படத்திற்கு டிக்கெட் கேட்டு கடிதம் அனுப்பியதற்காக என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்களே, அந்தப் படத்தைத் திரையிடும் உரிமையை முதல் அமைச்சரின் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒருவர் (ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்) பெற்று, கோடிக்கணக்கிலே இலாபம் அடைகிறாரே, அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா என்று அந்த உதவியாளர் கேட்காமல், கேட்கிறாராம்!