திமுகவுடன் கூட்டணியா? கூட்டணி குறித்து தேதி குறித்த பிரேமலதா! காஞ்சிபுரத்தில் பேசியது என்ன?
Premalatha vijayakanth: "காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார்"

"எந்த ஆட்சி வந்தாலும் மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும், திட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் பெயர் வைப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது வரவேற்கக் கூடியது அல்ல என காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில், குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்த பிறகு தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
பிரேமலதா - ஸ்டாலின் சந்திப்பு
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக அணிக்கு மாறுமா என்ற சந்தேகத்தையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே, அதிமுக சார்பில் தேமுதிகவிற்கு ராஜசபா சீட் ஒதுக்காதது தேமுதிகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குடும்பத்துடன் சாமி தரிசனம்
இந்தநிலையில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி இன்று மாலை நடைபெற்ற தங்கத்தேர் உற்சவம் மற்றும் சிறப்பு அர்ச்சனைகளில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
அரசியல் நாகரிகம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜய்காந்த்: அரசியல் நாகரிகம் கருதியே முதல்வரின் உடல் நலம் குறித்து நேரில் சென்று சந்தித்ததாகவும், கடந்த காலங்களில் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நேரில் வந்து நலம் விசாரித்தார். பொதுவாகவே அரசியலுக்கு அப்பாற்பட்டு நாகரிகம் கருதி ஒருவரை ஒருவர் சந்தித்து, நலம் விசாரிப்பது சிறந்த பண்பு என தெரிவித்தார்.
கூட்டணி அறிவிப்பது எப்போது?
வெவ்வேறு கட்சியினர் சந்தித்தாலே கூட்டணி என நினைப்பது நமது கலாச்சாரமாக மாறிவிட்டது. நாகரிகம் கருதியே முதல்வருடன் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தார். ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் "தேமுதிக மாநாடு"நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது, இதனால் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
பெயர் வைப்பது வரவேற்கத்தக்கதல்ல
எந்த ஆட்சி வந்தாலும் மக்கள் வரிப்பணத்தில், செய்யப்படும் திட்டங்களுக்கு ஆட்சியாளர்களின் பெயர் வைப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, இது வரவேற்கக் கூடியது அல்ல. மக்கள் நல கூட்டணி மக்கள் ஏற்காத, கூட்டணி என்று, மக்களே தீர்மானித்து விட்டனர் என தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் உடன், கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.





















