செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
தனது நீக்கம் குறித்து ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர போகிறேன் என்றார்.

மன்னிப்பு கேட்டாலும் செங்கோட்டையனை இனி கட்சியில் சேர்க்க முடியாது என அதிமுக பொருளார் திண்டுக்கல் சீனிவாசன் காட்டமாக பேசியுள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம்:
தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என மூவரும் கலந்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியிருந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
செங்கோட்டையன் எதிர்ப்பு:
தனது நீக்கம் குறித்து ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர போகிறேன் என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமியும் அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து இன்று விளக்கமளித்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு:
இந்த நிலையில் மதுரையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்
"செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னால் பிறந்தவர். அந்த ஒரு தகுதியை தவிர, எல்லா விதத்திலும் அனைத்து விதமான தகுதிகளையும் கொண்டவர் இபிஎஸ். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்து கொடநாடு வழக்கு நடக்கிறது. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை ஜெயிலில் போடாமல் ஏன் இருக்கின்றார்கள்? பொதுக்குழு உறுப்பினர்களால் சட்டப்படி நீக்கப்பட்டவர் ஓபிஎஸ்.
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும், கட்சியில் அவரை மீண்டும் சேர்க்க முடியாது. ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இருக்கும் தொண்டர்கள் மன்னிப்புக் கேட்டால், ஆலோசித்து சேர்க்கப்படும். இவர்களால் அதிமுகவிற்கு எந்த பலவீனமும் கிடையாது. நாங்கள் ஸ்டெடியாக இருக்கின்றோம். செங்கோட்டையன் அதிமுகவில் ராஜாவாக இருந்தார். ஆனால், தற்போது சிலருக்கு கூஜா தூக்கி வருகிறார்"
மேலும் செங்கோட்டையன், ஏ1 என கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், கோடநாடு வழக்கில் ஆதாரம் இருந்தால் பழனிசாமியை பிடித்து உள்ளே போடுங்கள் என்று கூறினார். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நடக்கிறது. போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கட்டும். பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது இந்த தி.மு.க. அரசு. அதனால், பணம் கொடுப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது என்று கூறினார்.






















