TVK Vijay : ‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
”பீகாரில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த பின்னர், தமிழ்நாட்டிலும் அப்படியான ஒரு தோல்வியை சந்திக்க, ராகுல்காந்தி விரும்பவே மாட்டார் என்பது அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களுக்கு கூட தெரியும்”

கரூரில் நடைபெற்ற விஜயின் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின்போது விஜயை தொடர்புகொண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இரண்டு தரப்புமே அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக பேச்சு நடைபெற்றதா? அல்லது இல்லையா? என்பதே தெரியாத நிலையில் விஜயுடன் ராகுல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டதாக சிலர் கொளுத்திப் போட்டனர். ஆனால், அப்படியான எந்த அறிகுறிகளும் இரண்டு கட்சித் தலைமைகளிடமே தென்படவில்லை.
விஜயை தொடர்புகொண்டாரா ராகுல் ?
இந்நிலையில், S.I.R என்ற சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக விஜயை தொடர்புகொண்டு ராகுல்காந்தி பேசினார் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் மறைமுகமாக ஊடகங்களுக்கு தகவலை கசியவிட்டனர். இதனால், மீண்டும் காங்கிரஸ் – த.வெ.க கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன என்பது போன்ற தோற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்க டெல்லியில் லாபி செய்யும் சில கதர் சட்டைகள் முயற்சித்துள்ளன.
ஆனால், பீகார் தேர்தலில் படுத் தோல்வி, அதன்மூலம் கட்சிக்குள் எழுந்திருக்கும் கலக குரல்கள் போன்ற அந்த கட்சியின் முக்கிய பிரச்னைகளில் ஆழ்ந்திருக்கும் ராகுல், இந்த விவகாரத்திற்காக விஜய்க்கு அழைத்து பேசவே இல்லை என்று அடித்துச் சொல்கின்றனர் சத்தியமூர்த்திபவனின் முக்கிய நிர்வாகிகள்.
S.I.R ஐ வீரியமுடன் எதிர்க்கும் திமுக – ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்
அதோடு, விஜய்க்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் இந்த S.I.R ஐ எதிர்த்தது திமுக. அதற்காக அனைத்துக் கட்சி கூட்டம், மாநிலம் தழுவிய போராட்டம் என்ற அறிவித்து, அதனை தீவிரமாக தங்களுடைய கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு மிகப்பெரிய அளவில் செயல்படுத்திவருகிறது திமுக. அப்படியான நிலையில், ஒரே ஒரு ஆர்ப்பாட்டம் அறிவித்ததற்காகவும், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதற்காகவுமே ராகுல்காந்தி மீண்டும், மீண்டும் விஜயை தொடர்புகொண்டு பேசினார், வாழ்த்தினார், ஆதரவு அளித்தார் என்று கிளப்பிவிடுவதற்கு காரணம் சிலரின் சுயநல அரசியல்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்
ராகுல் காந்தியின் எண்ணம் என்ன ?
பீகாரில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த பின்னர், தமிழ்நாட்டிலும் அப்படியான ஒரு தோல்வியை சந்திக்க, ராகுல்காந்தி விரும்பவே மாட்டார் என்பது அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களுக்கு கூட தெரியும் சங்கதி. அப்படியிருக்கையில், வலுவான திமுக கூட்டணியை உதறிதள்ளிவிட்டு, ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தோடு அவர் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினார் என்றால் அதன்மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அதளபாதாளத்திற்கு சென்றுவிடும் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், விஜயுடன் அவர் நட்புடன் இருந்தாலும், தமிழ்நாட்டின் அரசியல் கணக்கு என்பது ராகுலை பொறுத்தவரை வேறு. திமுகவோடு சேர்ந்து 2026 தேர்தலை எதிர்கொள்வதுதான் புத்திசாலிசனம் என்பதும், அப்படி எதிர்கொண்டால் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் எம்.எல்.ஏக்களை பெற முடியும் என்பதும் ராகுலுக்கு நன்றாகவே தெரியும். எனவே, தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம் காங்கிரஸ் வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படியான சூழலில், திமுக கூட்டணியை விடுத்து வேறு ஒரு கூட்டணியை ராகுல் நினைத்துக் கூட பார்க்க மாட்டார் என்பது சத்தியமூர்த்தி பவனின் முக்கிய தலைகளின் கணக்கு.





















