எஸ்.பி. வேலுமணி மீது 150 பக்க ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஊழல் புகார்..!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் புகார் அளித்திருந்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத். ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என அழைக்கப்படும் இவர் சிறுவாணி என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். அதிமுக நிர்வாகியாக இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 26 ம் தேதி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதில் கோவையில் பல்வேறு திட்டங்களில் 12 சதவீதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சிலர் உடந்தையாக செயல்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று கோவை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி துறைகளில் நடந்த ஊழல் தொடர்பாக 150 பக்க ஆவணங்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ரேஸ்கோர்ஸ் ரகுநாத் ஊழல் புகார்களை தெரிவித்துள்ளார். கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இலஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், ”முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்ந்த நபர்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி பல ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே நான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 1500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தேன். எனது புகார் தொடர்பாக கடந்த வாரம் இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் என்னிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே நான் வைத்திருந்த ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் ஒப்படைத்துள்ளேன். இது எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும், துணிந்து ஆவணங்களுடன் புகார் அளித்துள்ளேன்.” என அவர் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதியன்று எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 க்கும் மேற்பட்ட இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13 இலட்ச ரூபாய் பணம், 2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை, முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. எஸ்.பி. வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட வங்கி லாக்கர் சாவியை கொண்டு, கடந்த ஒன்றாம் தேதியன்று இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் லாக்கரை திறந்து சோதனை நடத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.