2026ல் 40 சீட் வேணும்: புதிய பிளானோடு நெருக்கடியை கொடுக்கும் காங்கிரஸ்: சிக்கலில் திமுக.!
தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுக்கு நெருக்கடியை கொடுத்து வருவதாகவும், ஆனால் டெல்லி தலைமை கூட்டணியில் உறுதியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 40 தொகுதிகளை கேட்டு, திமுகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான வேலைகளையும், காங்கிரஸ் கட்சியானது தற்போது இருந்தே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் அரசியல் வரவு, விசிக ஆட்சியின் அதிகார பங்கு கோரிக்கை, தற்போதைய காங்கிரஸின் தொகுதி பங்கீடு கோரிக்கை என வரும் தேர்தல் திமுகவினருக்கு சவால் நிறைந்ததாக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
காங்கிரசின் புதிய திட்டம்:
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில், ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் 40 தொகுதிகளை பெற வேண்டும் என்ற புதிய முனைப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே ஒரு மக்களவை தொகுதிக்கு ஆறு சட்டமன்ற தொகுதிகள் என்ற அடிப்படையில் 9 மக்களவை தொகுதிகளுக்கு, 54 தொகுதிகளை பெற வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரசில் எழுந்துள்ளது. ஆனால், கட்சி கட்டமைப்பு பலமாக இல்லாத காரணத்தால்,குறைந்தது 40 தொகுதிகளாவது பெற வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
கட்சியை பலப்படுத்தும் காங்கிரஸ்:
இதற்காக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அதற்காக கிராம காங்கிரஸ் சீரமைப்பு, கிராம தரிசனம் திட்டங்களை செயல்படுத்த, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டுள்ளார். முதலாவதாக, தமிழகம் முழுவதும் கிராமங்களை சீர்படுத்த, காங்கிரசை மேலிட பொறுப்பாளர் சூரஜ் ஹெக்டேவுடன் இணைந்து சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார் செல்வப்பெருந்தகை.
இதையடுத்து கிராம தரிசனம் என்ற பெயரில், கிராமங்களில் முகாமிட்டு மக்களை சந்திக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர், ஜனவரியில் கிராம கமிட்டி மற்றும் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறாக காங்கிரஸ் புதிய திட்டத்தில் களமிறங்கியுள்ளது.
டெல்லி தலைமை உறுதி:
ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழக காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே சற்றும் உரசலான போக்கு இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி என்றும் பாராமல் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். மேலும் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இப்படி கூட்டணிக்குள் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தான் ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என கூறியிருந்தார். இதனால் சில காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் எனவும் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் திமுக கூட்டணியில் தொடரவே டெல்லி தலைமை விரும்புவதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெருக்கடியில் திமுக
வரும் தேர்தலில் திமுக தலைமை, 200 தொகுதிகளில் வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது. மீதமுள்ள 34 தொகுதிகளில் காங்கிரஸுக்கு, 15 தொகுதிகளை ஒதுக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் காங்கிரஸோ 40 தொகுதிகளை கேட்டு தலைமைக்கு நெருக்கடியை கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் விஜய் வருகை, விசிகவின் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் காங்கிரஸின் தொகுதி பங்கீடு கோரிக்கையும் திமுகவும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது எனறே கூறப்படுகிறது.