Vijayadharani : விஜயதரணியை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம் - செல்வப்பெருந்தகை
சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி, பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில், தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்த விஜயதரணி:
காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரான விஜயதரணி , கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக விஜயதரணி டெல்லியில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கடிதம்:
ஒரு கட்சியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று, மற்ற கட்சிக்கு மாறினால், இந்திய அரசியலமைப்பு சட்டம் அட்டவணை 10 அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்பது விதியாகும்.
அதனடிப்படையில், கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விஜயதரணி மீதான நடவடிக்கை தொடர்பான கடிதத்தில், சபாநாயகர் அப்பாவு, எப்போது எதுபோன்ற நடவடிக்கை எடுக்க போகிறார் என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியவரும்.
நெருங்கும் தேர்தல்:
சில தினங்களில் தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்றும், 2 மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த கே.எஸ் அழகிரிக்கு பதிலாக செல்வப்பெருந்தகையை புதிய தலைவராக காங்கிரஸ் கடந்த வாரம் நியமனம் செய்தது.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் கடந்த இரண்டு வாரங்களாக பரவி வந்தது. ஆனால், அந்த தகவல் வதந்தியே, உட்கட்சி பூசல் எதுவும் இல்லை என காங்கிரஸ் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று, விஜயதரணி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. அது இப்போது வைரலாகி வருகிறது. அதில், "எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு ஆர்எஸ்எஸ் தான் சரியான இடம்" என ராகுல் காந்தி பேசுவது பதிவாகியுள்ளது.