CM VIJAY : ”பெண்களை பற்றி பேசினால் சும்மா விடமாட்டேன்”...பகிரங்க எச்சரிக்கை விடுத்த CM VIJAY
இடைத்தேர்தலை முன்னிட்டு தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 2-வது முறையாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் பொறுத்துக் கொள்வேன், ஆனால் பெண்கள் பற்றி பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என முதலமைச்சர் விஜய் காட்டாமாக தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை (107) கைப்பறிய தவெக முதலமைச்சர் விஜய் தலைமையில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால், அந்த தொகுதிகள் காலியானவையாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாளை மறுநாள் (அக்.6) தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் என 5 கட்சிகள் போட்டியிடுகின்றன.
கடைசி நாள் பிரச்சாரம்
இன்று (அக்.4) மாலையுடன் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் முடியவடையவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், அக்கட்சியின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் 2-வது முறையாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதலமைச்சரின் ரோட் ஷோ
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்து தாராபுரம் சென்று சாலை மார்க்கமாக மக்களை சந்தித்தார். அப்போது, சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தது. முதலமைச்சர் விஜயும் மக்களை பார்த்து கையசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதலமைச்சர் பேச்சு
சாலை மார்க்கமாக மக்களை சந்தித்த முதலமைச்சர் விஜய், பிரச்சார வாகனத்தை நிறுத்திவிட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லிவிட்டு போகிறேன். நான் அன்று பேசும் போது சொல்லியிருந்தேன். திமுகவுக்கும் மற்றும் பலருக்கும் ஓட்டு போட்டீர்கள் என்றால் பெண்களை அசிங்க அசிங்கமாக பேசுபவர்களை நாம் ஆதரிப்பது போல ஆகிவிடும் என்று சொல்லியிருந்தேன். நம்ம வீட்டு பெண்கள், நமது அம்மா, அக்கா, தங்கைகளை அவதூறாக பேசுபவர்களை நாம் ஆதரிக்கிற மாதிரி ஆகிடும் என்று சொன்னேன். நான் வெறும் ஓட்டிற்காக மட்டும் அதை சொல்லவில்லை”
”நேற்று முன் தினம் ஸ்டாலின் வந்து என்ன பேசிவிட்டு சென்றார். அப்பாவும் புள்ளையும் தாராபுரத்திற்கு வந்து, தயவு செய்து திமுகவிற்கு ஓட்டு போடாதீங்க..கோடானு கோடி நன்றி..கோடானு கோடி நன்றி என இப்பவே சொல்லிவிட்டு போய்விட்டார்கள். என்ன பேச்சு பேசிவிட்டு போயிருக்கிறார். அவர் மட்டுமா இப்படி பேசுகிறார். அவர் வளர்த்து வச்சிருக்கிற எல்லாரும் இப்படிதான் பேசிட்டு போறாங்க; என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போங்க..நான் அதை பொறுத்துப்பேன். ஆனால் நம்ம சகோதரியை பற்றியோ நம்ம வீட்டில் இருக்கும் அம்மா அக்கா தங்கைகளை பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன் தேர்தலுக்காக இல்லை எப்போது வேண்டுமானாலும் மக்களை பார்க்க வருவேன்” இவ்வாறு பேசினார்.
சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்டாலின்
முன்னதாக தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய கருத்துகள் பெரும் பேசுபொருளாகி அனைவரின் கண்டனத்தையும் பெற்றது. இந்நிலையில், அவரது இந்த பேச்சிற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















